Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Union Budget 2025: மத்திய அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மீது ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்புடன் உள்ளது.

Union Budget 2025: நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருப்பது மத்திய நிதிநிலை அறிக்கை ஆகும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, இரண்டாவது முறையாக இன்று மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது.
பட்ஜெட் இன்று தாக்கல்:
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை நாடே மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கியுள்ளது.
மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியமாக கருதப்படும் விவசாயம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பிற்கு இந்த பட்ஜெட் எந்தளவு உறுதுணையாக இருக்கப்போகிறது? என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் ராணுவம், தொழில்நுட்பம், அறிவியல், விண்வெளி ஆகியவற்றிற்கும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வருமான வரி உச்சவரம்பு
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது மக்கள் எதிர்பார்ப்பில் முதன்மையாக இருப்பது வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா? என்பதே ஆகும். தற்போது புதிய வருமான வரி விதிப்படி 3 லட்சம் வரை வருமான வரி விலக்கு உள்ளது. இதை 5 லட்சமாக ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகுமா? என்று எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான நிதிநிலை அறிக்கையாக இருக்காது என்றே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், சாமானிய மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியே ஆகும்.
ரயில்வே துறை:
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் இணைந்தே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், நாட்டின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான போக்குவரத்து சேவையான ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமா? என்றும், நாட்டின் போக்குவரத்து சேவைக்கு வலுசேர்க்கும் விதமாக புதிய ரயில்கள் அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசு வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனாலும், அதன் கட்டணம் அதிகளவு இருப்பதால் சாமானியர்களால் அதில் பயணிக்க இயலவில்லை. இதனால், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கட்டுக்குள் வருமா தங்கம்?
சாமானிய மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால், கடந்த பட்ஜெட்டில் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர அதன் இறக்குமதி வரியை குறைத்தது போல, இந்த முறையும் ஏதாவது அறிவிப்பு இருக்குமா? என்ற ஏக்கமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகம் கவனிக்கப்படுமா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்கட்டமைப்பு, போக்குவரத்து, புதிய ரயில்கள், சுகாதாரத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் உள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகாருக்கு அதிகளவு நிதி ஒதுக்கி, மற்ற மாநிலங்களுக்கு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்த பட்ஜெட்டில் மற்ற மாநிலங்களுக்கும் போதிய அளவிலான நிதி ஒதுக்கப்படுமா? என்று அந்தந்த மாநில அரசுகள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

