Nellai Book Fair: நெல்லையில் புத்தகத்திருவிழா .. தேதியை அறிவித்தார் ஆட்சியர் கார்த்திகேயன்!
தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை நெல்லை மாவட்டம் பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது .
தமிழ் இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்பை நெல்லை மாவட்டம் பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது . இதனை கொண்டாடும் விதமாகவும், இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு செய்திடவும், இளம் தலைமுறையினரிடையே இலக்கியம், புத்தகம், கலைகள் குறித்து ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டு தோறும் இலக்கிய திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டுக்கான இலக்கியத் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா நடப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, பொருநை நெல்லை திருவிழா 2024- ல் இரண்டாவது பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கிய திருவிழா வருகிற 30 மற்றும் 31ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம் மற்றும் பிபிஎல் மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த இலக்கிய திருவிழாவில் தென் மாவட்டங்களின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற இருக்கிறார்கள். மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் தங்களின் இலக்கிய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் பங்கேற்கின்றனர். மேலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் விவாத மேடை, மற்றும் இலக்கிய வினாடி வினா போட்டிகள், தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு - பேச்சு போட்டிகள் என இலக்கியம் தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஏழாவது பொருநை புத்தகத் திருவிழா பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை டவுண் பொருட்காட்சி திடலில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடக்கிறது. இந்த கண்காட்சியில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
மேலும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதை ஒட்டி தினமும் சிறந்த ஆளுமைகள் பங்குபெறும் கருத்தரங்குகள், கவியரங்குகள், பட்டிமன்றங்கள், பல்வேறு அரசு துறைகளின் சிறப்பு நிகழ்வுகள் போன்றவை நடைபெற உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி பட்டறையில் மாவட்டத்தின் தொன்மையான கைத்தொழில்கள் மற்றும் கலைகள் குறித்து அத்துறை சார்ந்த வல்லுனர்களால் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக இந்த புத்தகத் திருவிழாவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழி இல்லா புத்தகத் திருவிழாவாக நடத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னதாக இலக்கிய திருவிழா குறித்து பொதுமக்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.