Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த பேசினார். அது குறித்து சூசகமாக அவர் என்ன கூறினார் தெரியுமா.?

இன்று சட்டப்பேரவையில், இருமொழிக் கொள்கை குறித்த விவாதம் நடைபெற்றது. அது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் உரையாற்றினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்த தகவலை போட்டு உடைத்தார். அது குறித்து அவர் என்ன பேசினார் என்பதை காண்போம்.
இருமொழிக் கொள்கை குறித்து உரையாற்றிய அனைத்து கட்சியினர்
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இருமொழிக் கொள்கை குறித்த விவாதமும் இன்று நடைபெற்றது. அப்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பது பற்றி உரையாற்றினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வராத நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் உரையாற்றினார். மொழிக் கெள்கை விவகாரத்தில், அரசுடன் துணை நிற்பதாக அனைவரும் உறுதியளித்தனர். இந்த நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் இருமொழிக் கொள்கையில் அரசின் நிலைப்பாடு குறித்து உரையாற்றினார்.
எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி சென்றார்.? - மு.க. ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக தவிர்த்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதை, அவர்களின் உரை காட்டியதாக தெரிவித்தார்.
மேலும், இருமொழி, மும்மொழிக் கொள்கை குறித்து மத்திய அரசிடம் இருந்து வந்த கடிதத்திற்கு, இங்கு அதிகாரிகள் மூலம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், தவறான கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்வதாக இருந்ததாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சுட்டிக்காட்டியதாகவும், ஆனால், இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதால், அதற்காக கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்காக டெல்லி சென்றார், யாரை சந்திக்க சென்றுள்ளார் என்பது குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த சந்திப்பின்போது, சம்பந்தப்பட்டவர்களிடம், இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி எடுத்துரைக்க வேண்டும் என்று அவையின் சார்பாக வேண்டுகோள் விடுப்பதாக கூறினார்.
அவரது இந்த பேச்சின் மூலம், கூட்டணி குறித்து பாஜகவினரை சந்திக்கத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார் என்பதை சூசகமாக உணர்த்தியிருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

