புற்றுநோய் கட்டியை அகற்றி உயிரை காப்பாற்றிய திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
’’இந்த நோயாளிக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் 6 முதல் 8 லட்சங்கள் செலவாகும்’’
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (50). இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயினால் அவதியுற்று வந்துள்ளார். மேலும் அவர் நாட்டுமருந்து சிகிச்சை முறை மற்றும் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, பலனளிக்காமல் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தமிழ்ச்செல்வனுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், இரத்தம் மற்றும் சிறுநீர், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள் மற்றும் உயர்தர ஸ்கேன்கள் (CT ஸ்கேன், MRI ஸ்கேன்) மூலமாக கணையம், பித்தநாளம், சிறுகுடல் இணையும் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அரசு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ஜோசப்ராஜின் ஆலோசனைப்படி, அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டது . இந்த சிக்கலான அறுவை சிகிச்சை செய்யும் முன், நோயாளியின் உடல்நிலை 6 யூனிட் இரத்தம் செலுத்தி மேம்படுத்தப்பட்டு மயக்கவியல் மருத்துவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டது.
இந்த அரிய சிக்கலான அறுவைசிகிச்சையை தலைமை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் ஜீவாராமன், சவிதா, ரமேஷ் ஆகியோரின் மேற்பார்வையிலும் மருத்துவர்கள் சரவணன், தீபன், மதுசூதனன், ஸ்ரீதரன் ஆகியோர் அடங்கிய அறுவை சிகிச்சை குழுவும் மற்றும் தலைமை மயக்கவியல் மருத்துவர்கள் லெனின், அருள்ராஜன், தீபாடேவிட் ஆகியோரின் மேற்பார்வையிலும் மருத்துவர்கள் மணிகண்டன், அனீஸ்அஹமது ஆகியோர் அடங்கிய மயக்கவியல் மருத்துவர்கள் குழுவும் இணைந்து 6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி இருந்த பகுதி முழுமையாக அகற்றப்பட்டு சிறுகுடல் இணைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் உயர்தர மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது . நோயாளியின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு மஞ்சள்காமாலை முற்றிலும் குணமடைந்து இப்பொழுது அந்த நோயாளி பூரண நலமுடன் உள்ளார். இந்த நோயாளிக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் 6 முதல் 8 லட்சங்கள் செலவாகும்.
ஆனால் இங்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது . கொரோனா பெரும் தொற்றுக்கு பிறகு அணைத்து விதமான உயரிய அறுவை சிகிச்சை முறைகள் மருத்துவ கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் பயன்பெறுமாறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தைகைய சிக்கலான அறுவை சிகிச்சை ஏற்கனவே 14 முறை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நோயாளியை தமிழ்ச்செல்வனுக்கு புற்றுநோய் பாதிப்பிற்கான சிகிச்சையை தொடர்ந்து அளித்து வருவதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த நோயாளியின் உயிரை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார்.