குப்பை நகராகும் கோயில் நகரம்.. வார்டுகளை சுத்தம் செய்ய மதுரை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை !
”மதுரை மாநகராட்சி மேயர் மதுரை குப்பை நகரம் என சொல்வதற்கு கோபப்படுகிறார். ஆனால் உண்மையில் இது குப்பை நகராக தான் மாறுகிறது” - என வேதனை வெளிப்படுத்தினர்.

மதுரை மாநகரில் குப்பை தொட்டிகளாக மாறிய சொகுசு கார்கள், மதுப்பிரியர்களின் பாராக மாறிய கார்கள் - பொதுமக்கள் வேதனை.
துர்நாற்றம் வீசும் மதுரை மாநகராட்சி வார்டுகள்
மதுரை மாநகராட்சி 15-ஆவது வார்டுக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம், பழைய விஜயலட்சுமி தியேட்டர் பிரதான சாலையில் முதியோர் இல்லம், பள்ளி உள்ளிட்டவைகள் முக்கிய இடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பிரதான சாலையோரம் பகுதியில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் மற்றும் பைக்குகள் சாலையோரத்தில் குப்பைகள் போல கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு கார்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பை தொட்டிகளாக மாற்றியுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் கண்ணாடிகள் கதவுகள் முழுவதுமாக உடைக்கப்பட்டு சொகுசுகார்கள் குப்பை கார்களாக மாறியுள்ளது. 40-க்கும் மேற்பட்ட கார்களை குப்பை கொட்டும் தொட்டிகளாக மாற்றிய பொதுமக்கள் அனைத்து விதமான உணவுக் கழிவுகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை கொட்டுவதோடு, அந்த பகுதியில் உள்ள உணவகங்களில் இருந்தும் குப்பைகளை கொட்டுவதால் கடுமையான துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது.
போதை ஆசாமிகளின் புகலிடம்
இதனால் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களும் பள்ளிகளுக்கு செல்லும் மாணாக்கர்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருவதால் தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கார்கள் முழுவதிலும் இரவு நேரத்தில் மது குடிக்கும் பாராக மாறியதால் அந்த வழியாக செல்லும் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாக மாறிவருகிறது. காவல்துறையினர் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்கள் கேட்பாரின்றி குப்பை போல கிடப்பதால் அதனை மது குடிப்பவர்களும், போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களும், கஞ்சா பயன்படுத்தும் பகுதியாகவும், மாறுவதால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே அந்த பகுதியில் இருந்த குப்பை தொட்டிகளை கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கக்கூடிய பகுதிகளுக்குள்ளே வீசிவிட்டு சென்றுவிட்டனர் எனவும், விஸ்வநாதபுரம் பகுதி முழுவதிலும் குப்பை நகரம் போல மாறிவிட்டதாகவும் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் கூறினால் 15 வது வார்டு அல்ல 14வது வார்டு புகார்களை அலைக்கழித்து வருகின்றனர், என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சொகுசு கார்கள் முழுவதிலும் குப்பை தொட்டியாக மாறியதால், ஏராளமான பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் முதியோர் இல்லத்திலும் பள்ளிகளுக்கும் செல்வதால் முதியவர்கள் மற்றும் மாணாக்கர்கள் கடும் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
குப்பை நகராக மாறும் மதுரை
மதுரை மாநகராட்சி மேயர் மதுரை குப்பை நகரம் என சொல்வதற்கு கோபப்படுகிறார். ஆனால் உண்மையில் இது குப்பை நகராக தான் மாறுகிறது, என அப்பகுதி மக்கள் வேதனையை வெளிப்படுத்தினர். எனவே விஸ்வநாதபுரம் பகுதியை பாதுகாக்க மாநகராட்சியும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும், குப்பை போல கிடக்கக்கூடிய சொகுசு கார்களை மீட்டு காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எனவும், மாநகராட்சி உடனடியாக அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்” பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















