IND vs ENG: இன்று கடைசி டெஸ்ட் ஸ்டார்ட்.. தொடரை வெல்லுமா இங்கிலாந்து? சமன் செய்யுமா இந்தியா? ஒரே த்ரில்தான்..
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 1 டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிரா ஆனது.
இன்று கடைசி டெஸ்ட் தொடக்கம்:
இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கென்னிங்டன் ஓவலில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், இந்த போட்டியை டிரா செய்தாலே அவர்கள் தொடரை கைப்பற்றி விடுவார்கள். இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
இதனால், இங்கிலாந்து அணியை காட்டிலும் இந்தியாவிற்கே இந்த போட்டி மிகவும் சவாலானதாக அமைந்துள்ளது. போட்டி நடக்கும் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சொந்த மைதானத்தில் ஆடுவது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

பேட்டிங்கில் அசத்தும் இந்தியா:
இந்திய அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் வகையில் தயார் செய்யப்படுவதால் பந்துவீச்சாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிற்கு பக்கபலமாக உள்ளனர். குறிப்பாக, கேப்டன் சுப்மன்கில் - கே.எல்.ராகுல் இந்திய அணியின் தூணாக உள்ளனர். பின்வரிசையில் ஜடேஜா தூணாக உள்ளார். இந்த தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். ரிஷப்பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக துருவ் ஜோரல் அணியில் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது.
சவால் தரும் இங்கிலாந்து:

இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் பலமாக காணப்படுகிறது. பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக ஒல்லி போப் இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்குகிறார். ஸ்மித், கிராவ்லி, டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோர் பலமாக உள்ளனர். குறிப்பாக, ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளார்.
இந்திய அணியில் பந்துவீச்சில் சிராஜ், ஆகாஷ் தீப், கம்போஜ் உள்ளனர். பும்ரா இந்த போட்டியில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. குல்தீப் யாதவ் அவருக்கு பதிலாக களமிறங்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
டாஸ் முக்கிய பங்கு:
இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெறவே முனைப்பு காட்டும். இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணியே இந்த மைதானத்தில் அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடிய இந்திய அணி இந்த மைதானத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.




















