தமிழ்த்தாய் வாழ்த்தை சேர்ந்து பாடுவோம்... மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தாருங்கள்: வித்தியாசமான, எளிமையான தஞ்சை கலெக்டர்
தஞ்சையில் பிரண்ட்ஸ் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் பிரண்ட் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா ஆகியவை நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சையில் பிரண்ட்ஸ் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் பிரண்ட் தொண்டு அறக்கட்டளை திறப்பு விழா மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா ஆகியவை நடந்தது. விழாவில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்தை சேர்ந்து பாடுவோம் வாங்க
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி அருகில் பிரண்ட் ட்ராக் கால் டாக்சி நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு, பிரண்ட் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவும் நடந்தது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆடியோ போடப்பட்டது. உடன் அதை ஆப் செய்து விடுங்கள். அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து சேர்ந்து பாடுவோம் என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்து பாட ஆரம்பித்தார். உடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்கள்
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதாவது: பொதுவாக நான் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அரசு விழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்வது என்று உறுதியாக உள்ளேன். ஆனால் இந்த நிகழ்வு மக்களுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் என்பதால் உடனடியாக சம்மதம் தெரிவித்து வந்தேன். பேரிடர் காலங்களில் மிகவும் உதவிகரமாக செயல்படும் உங்களுடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்படும். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அதைவிட கண்தானம் உட்பட உடல் உறுப்புகள் தானம் மிகவும் சிறந்த ஒன்று. பேரிடர் ஏற்படக்கூடாது என்பதுதான் எனது வேண்டுதலும் கூட. இங்கு பல தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வந்து உள்ளீர்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாமிற்கு வந்தவர்களில் 22 பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பை பெற்று தர முடிந்தது. நீங்கள் உங்கள் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள். இதனால் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டுக்களை குவித்த கலெக்டரின் செயல்பாடுகள்
பின்னர் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பிரண்ட்ஸ் தொண்டு நிறுவனத்தை மகாராஜா குழும சேர்மனும், லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநருமான முகமது ரஃபி தொடக்கி வைத்தார். மேலும் கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று மகாராஜா குழுமத்தில் மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு வேலை தருவதாக விழா மேடையிலேயே வாக்குறுதி அளித்தார். கலெக்டர் இந்த எளிமையான அணுகுமுறை அனைவராலும் பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினர்களாக கனரா வங்கி துணை பொது மேலாளர் ஆனந்த் தோத்தாத், சாப்ட் ஸ்கில் டிரெய்னர் ஸ்டாலின் பீட்டர் பாபு, சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் மணிமாறன், தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ராஜ சீனிவாசன், காஸ்மோஸ் ரோட்டரி கிளப் தலைவர் தர்மராஜா மற்றும் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் சினேகம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் முகமது மசூது நன்றி கூறினார்.