பான் அட்டை வைத்துள்ள அனைவரும் வரி செலுத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் - முதன்மை ஆணையர்
நாடு முழுவதும் மக்கள் தாக்கல் செய்யும் வருமான வரி படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரகத்தில் 2023 - 24 ஆம் நிதியாண்டில் 2.46 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று வருமான வரித் துறை மதுரை முதன்மை ஆணையர் டி. வசந்தன் தெரிவித்தார்.
வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கூட்டம்
தஞ்சாவூரில் வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் நிர்வாகத்துக்கு வருமான வரி முதுகெலும்பாக உள்ளது. நம் நாட்டில் ஏறத்தாழ 61 கோடி பேருக்கு பான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 2023 - 24 ஆம் நிதியாண்டில் 8.18 கோடி மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தனர்.
இதில், திருச்சி மண்டலத்துக்கு உள்பட்ட தஞ்சாவூர் சரகத்தில் 4.13 லட்சம் பேர் பான் அட்டைகள் வைத்துள்ள நிலையில், 2.46 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்தனர். அதாவது, வருமான வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 56 சதவீதம் பேர் மட்டுமே. மீதமுள்ள 44 சதவீதம் பேர் தாக்கல் செய்யவில்லை. எனவே, தகுதியுடைய அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய முன் வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்களும் தாங்களாகவே முன்வந்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்
நாடு முழுவதும் மக்கள் தாக்கல் செய்யும் வருமான வரி படிவங்களில் 0.25 சதவீதம் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 99.75 சதவீத படிவங்கள் மக்கள் மீதான நம்பிக்கை காரணமாக மதிப்பீடு செய்யப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, அதற்கேற்ப பொதுமக்களும் தாங்களாகவே முன் வந்து வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
பான் அட்டை வைத்துள்ள அனைவரும் வரி செலுத்தினால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் உலக அளவில் நம் நாடு மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
வரி செலுத்துபவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம்
இதேபோல் தஞ்சை, திருச்சி சரக வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நித்யா, தஞ்சை உதவி ஆணையர் சீனிவாசன் ஆகியோர் வரி செலுத்துபவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் வருமான வரி குறித்தான விழிப்புணர்வை தொழில் மற்றும் வணிகத்துறையினருக்கு ஏற்படுத்தவும், வரி செலுத்துவோரின் சேவைகளுக்காக மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் டிஜிட்டல் யுகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு மற்றும் கடமைகள், வரி செலுத்துவோரின் குறைகளுக்கான தீர்வுகள், அதற்கான வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் விளக்கிக் கூறப்பட்டது. இதேபோல் வருமான வரி குறித்தான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்களை துறை சார்ந்த அதிகாரிகள் அளித்தனர்.
கூட்டத்தில் தஞ்சை வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் தியாகராஜன், சேம்பர் ஆப் காமர்ஸ் தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, கும்பகோணம், திருவாரூர் நிர்வாகிகள், கும்பகோணம் பட்டய கணக்காளர்கள் சங்கத்தினர், வரி செலுத்துபவர்கள், வணிகர்கள், கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.