காணும் பொங்கலை ஒட்டி மக்கள் கூட்டத்தால் திணறிய தஞ்சாவூர்
ராஜாளி பூங்கா, தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம் என மக்கள் மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.
தஞ்சாவூர்: காணும் பொங்கலையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.
காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் (கன்னுப்பொங்கல்) அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.
இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெற்று தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். அதாவது வீட்டில் இருக்கும் வயதுக்கு மூத்தவர்கள் கால்களில் விழுந்து ஆசி பெற்று கொள்வது போன்றவை நடைப்பெறும். நம் வழித்தோன்றலுக்கும் நம்முடைய பண்பாட்டை தெரிவிப்பதோடு, பெரியோர்களிடம் ஆசி பெறுதல் போன்ற நல்லபழக்கம் மற்றும் கலாச்சாரத்தை தெரிவித்தல் ஆகியவை ஆகும்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல்.
பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் 4ம் நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் உறவினர்கள், நண்பர்களைக் காணுதல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், சுற்றுலா செல்லுதல் போன்றவை மேற்கொள்வது வழக்கம். இதை ஒட்டி தஞ்சாவூர் பெரியகோயில், அரண்மனை, தஞ்சாவூர் அருங்காட்சியகம், மணிமண்டபம் கும்பகோணம் தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில், கல்லணை, மனோரா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வழக்கமான நாள்களை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏராளமானோர் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விளையாடியும், அதே இடத்தில் உணவு அருந்தியும் கொண்டாடினர். வெளியூர்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். தஞ்சாவூரை சுற்றி அதிகளவு கிராமங்கள் என்பதால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கார்கள், வேன்கள், பைக்குகள் ஆகியவற்றில் குடும்பத்தோடு தஞ்சைக்கு வந்தனர். தஞ்சை மணிமண்டபம் பூங்காவில் அதிகளவு மக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அங்கிருந்த விளையாட்டு தளங்களில் தங்கள் குழந்தைகளுடன் அவர்களும் குழந்தைகளாக மாறி விளையாடி மகிழ்ந்தனர். சறுக்கு பலகை, ஊஞ்சல் போன்றவற்றில் குழந்தைகள் மனம் மகிழ்ந்து விளையாடினர். சிறுவர்கள் ஓடியாடி விளையாடினர். மக்கள் கூட்டத்தால் மணிமண்டப பூங்கா நிரம்பி வழிந்தது. வெளியே சாலையோரத்தில் நூற்றுக்கணக்கான பைக்குகள் நிறுத்தப்பட்டு இருந்தன. மேலும் தற்காலிக கடைகளில் அதிகளவு விற்பனை நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ராஜாளி பூங்கா, தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகம் என மக்கள் மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடினர்.
தஞ்சாவூர் நகர் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலையாகவே காணப்பட்டது. இதனால போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வழக்கத்தை விட அதிகளவு மக்கள் கூட்டம் இருந்ததால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் அவ்வபோது ரோந்து பணியும் மேற்கொண்டனர்.