திருவையாறு தியாகராஜர் 175வது ஆராதனை விழவில் கலைஞர்கள் இசை அஞ்சலி
’’இந்தாண்டு, விழாவிற்காக கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது ’’
திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 175 வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியில், இசை கலைஞர்கள் பங்கேற்று, தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா ஐந்து நாட்களுக்கு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு, விழாவிற்காக கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, ஒரு நாள் நிகழ்ச்சியாக நடத்த சபா சார்பில், திட்டமிடப்பட்டது .
அதன்படி, காலை 6:30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, முக்கிய வீதி வழியாக தியாகராஜர் நினைவிடத்திற்கு வந்தனர். தொடர்ந்து விழாவினை, சபா தலைவர் ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார். பந்தலில், காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. பிறகு, மங்கள இசை தொடங்கியது. தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகங்கள் நடந்தன. சரியாக, 9.00 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை, பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் துவங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற கீர்த்தனை பாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'லாதிஞ்சநெ ஓ மநஸே...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர். இதில், மஹதி, விசாகாஹரி, கடலுார் ஜனனி, சுசிந்தரா, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் உள்பட ஏராளமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாதஸ்வர கச்சேரி, பின், உபன்யாசம் நடந்தது. இரவு தியாகராஜர் உருவசிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
விழா நடைபெறும் இடத்திற்கு வந்த இசைக்கலைஞர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் தெர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே அமைதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குறைந்தளவிலான நபர்களை அனுமதிப்பட்டு இருந்தனர். திருவையாறில், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், தியாக பிரம்ம சபையில் 175வது ஆண்டு ஆராதனை விழா மிக சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, தியாகராஜர் சுவாமிகளுக்கு செய்ய கூடிய முறையான பணிகளை, கொரோனா காலத்திலும் மத்திய, மாநில அரசுகளின் கோட்டுபாடுகளுடன் முறையாக கடைபிடித்து, விழா மனநிறைவோடு நடந்துள்ளது. விழாவில், தங்களின் உடல் நலத்தையும் பாராமல், பல்வேறு இசைக்கலைஞர்கள் கலந்துக்கொண்டது சபை மேலும் பெருமை சேர்த்துள்ளது.
அரியலுாரில் மாணவிக்கு நடந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது, சிறுமிக்கு நடந்த சம்பவம் அவரது வருங்காலத்தை இருளிக்கியதோடு, வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இது போன்ற நிலை இனிமேல் எப்போதும், எங்கேயும் ஏற்படக்கூடாது. உண்மை நிலையை விசாரணை செய்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும். அது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும். அரசு இதில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தா.ம.கா.,சார்பில் வலியுறுத்துகிறேன் என்றார்.