Child Marraige: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் உண்மையா..? - அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தை திருமணம் தொடர்பான விசாரணையில் தற்போது திருப்புமுனையாக திருமணம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு ஒரு சில தீட்சிதர்கள் அப்பொழுது கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்பொழுது தமிழக ஆளுநர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும், பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்ட குழந்தைகளிடம் மருத்துவர்கள் இருவிரல் பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. அதன் அடிப்படையில் தலைமை செயலர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விசாரணை முடிவடைந்த அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் அந்த அறிக்கைகள் உண்மையா என கடந்த 24 -ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் உறுப்பினர் ஆனந்த் நேரில் சிதம்பரம் வருகை புரிந்து விசாரணை மேற்கொண்டார்.
அதில் ஆளுநர் குற்றச்சாட்டு உண்மை என தெரிவித்திருந்தார். மேலும் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் குழந்தைகளின் அந்தரங்க பகுதிகள் தொடப்பட்டது உண்மை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே உள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் கடந்த 11-ம் தேதி சேலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செய்திகள் அடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விசாரணை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிலே உள்ளதாக கூறினார்.
இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது எனவும், சம்பந்தப்பட்ட குழந்தைகளிடம் நேரில் விசாரணை செய்யும் பொழுது தங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை எனவும், காவல்துறை கட்டாயத்தின் பேரில் தாங்கள் நடைபெற்றதாக கூறியதாகவும் தெரிவித்தாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குழந்தை திருமணம் நடைபெற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளதால் குழந்தை திருமணம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் திருப்புமுணையாக அமையுமா என்று பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

