Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாட்டின் 79வது சுதந்திர தினம் நாளை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Independence Day 2025: இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் விடுதலை அடைந்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளுக்கு தங்களது பலத்தையும், செழிப்பையும் காட்டும் விதமாக இந்தியா இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.
சுதந்திர தின கொண்டாட்டம்:
நாடு முழுவதும் நாளை 79வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாகவே நடந்து வந்தது. டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முன்பு பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

அப்போது, ராணுவம், விமானம் மற்றும் கப்பல் படை ஆகிய முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பும் நடக்கும். இந்த அணிவகுப்பில் நாட்டின் ஒருமைப்பாட்டை பறைசாற்றும் விதமாக பல மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்பு வாகனமும், நடனங்களும் நடக்கும். விமானப்படையின் கண்கவர் சாகசமும் நடைபெற உள்ளது.
காத்திருக்கும் முப்படைகளின் அணிவகுப்பு:
முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளும் இந்த அணிவகுப்பில் நடக்கிறது. டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பறைசாற்றும் விதமாகவும் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. மேலும், நாட்டின் ராணுவ பலத்தை காட்டும் விதமாக பிரமோஸ் உள்ளிட்டவையும் இடம்பெற உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் அதற்கான ஒத்திகை பணியில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அவர் காவல்துறையினர் உள்ளிட்ட பல துறையினருக்கு விருதுகள் வழங்க உள்ளார்.
பலத்த பாதுகாப்பு:
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடக்கும் முதல் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விடுதிகள் உள்ளிட்ட புதியதாக வந்துள்ளவர்கள் அனைத்து நபர்களின் தரவுகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு:
தமிழ்நாட்டிலும் சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தின அணிவகுப்பை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அணிவகுப்பு நடைபெறுவதால் காமராஜர் சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




















