Sanskrit: மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம்! குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றும் பாஜக அரசின் புதிய திட்டம்?
ஒரு மாதத்தில் 757 மழலையர் சமஸ்கிருத பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக உள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் மழலையர் வகுப்புகளுக்கு சமஸ்கிருத பாடம் கட்டாயம்ப் ஆக்கப்பட உள்ளது. இதன்படி அடுத்த ஆண்டில் இருந்து எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு சமஸ்கிருத மொழிப் பாடம் கற்பிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோதாவத் கூறும்போது, ’’நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் மழலையர் அளவில் சமஸ்கிருத மொழி கற்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே அமைச்சரவைக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டு இருந்தது. இதை அடுத்து, சமஸ்கிருத பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்கி, புத்தகங்களையும் அச்சிட்டுள்ளோம். அமைச்சரவைக் கூட்டம் அனுமதி அளித்ததும் வகுப்புகள் தொடங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மூன்று திட்டங்களாக அமல்
இந்த செயல்திட்டம் மூன்று திட்டங்களாக அமல்படுத்தப்படும். முதல் கட்டத்தில், சமஸ்கிருத கல்வித் துறையின்கீழ் மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருத கல்வி கற்பிக்கப்படும். தற்போது ராஜஸ்தானில் எந்த சமஸ்கிருத பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படவில்லை.

அதே நேரத்தில், ஒரு மாதத்தில் 757 மழலையர் சமஸ்கிருத பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக உள்ளது.
காமிக் வடிவில், எளிய புத்தகம்
இந்த புத்தகங்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு, ராஜஸ்தான் மாநிலக் கல்வி வாரியம் மற்றும் என்சிஇஆர்டி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் மிக எளிய நடையில், காமிக் வடிவில் தயாரிக்கப்பட்டு உள்ளன. மழலையர் பள்ளியின் மூன்று வகுப்புகளுக்கான இந்த மூன்று புத்தகங்களும் மாணவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்தவும், அதன் அடிப்படைச் சொல்லகராதி மற்றும் இலக்கணம் பற்றிய ஒரு கருத்தை அவர்களுக்கு வழங்க மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகங்களைப் பொறுத்தவரை எல்கேஜி புத்தகத்துக்கு சமஸ்கிருதப் பிரவேசம்: பாலவாதிகா பிரதம் வாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. யுகேஜிக்கு சமஸ்கிருதப் பிரவேசம்: பாலவாதிகா த்விதிய வாக் என்றும் ஒன்றாம் வகுப்பு புத்தகத்துக்கு சமஸ்கிருதப் பிரவேஷம்: பால்வாதிகா திரித்ய வாக் எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எனினும் ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசின் இந்த முடிவுக்கு ஒருசேர எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகின்றன.






















