ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி அடைந்திருப்பதாக அமெரிக்கா பாராட்டியிருப்பது இந்தியாவிற்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

ஆஃபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவை காட்டிலும், இந்தியா - அமெரிக்கா உறவு மிகவும் சிக்கலாகிக் கொண்டு செல்கிறது. ஆபரேஷன் சிந்தூரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்த நிலையில், இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. பாகிஸ்தான் முழுவதும் அமெரிக்காவிற்கு அடிபணிந்துவிட்டது.
இந்தியாவை சீண்டும் அமெரிக்கா:
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அமெரிக்காவின் தலையீடு ஆபரேஷன் சிந்தூரில் இல்லை என்று கூறியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்தே, இந்தியாவிற்கு ஏற்றுமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தி பின்னர் 50 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், பாகிஸ்தானுக்கு வெறும் 19 சதவீதம் மட்டுமே வரியாக விதித்துள்ளார்.

இந்த விவகாரத்திற்கு பிறகு அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடைந்திருப்பதாக அமெரிக்கா பாராட்டியிருப்பது இந்தியாவிற்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பாகிஸ்தானுக்கு பாராட்டு:
பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அங்கீகரித்த நிலையில், அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிக்கையில், பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க இரு ( அமெரிக்கா, பாகிஸ்தான்) நாடுகளும் உறுதியாக உள்ளன.
பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐஎஸ்ஐஎஸ், கோராசன் மற்றும் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்புகின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பயனுள்ள வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம் முக்கியம் ஆகும்.

பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே நீண்ட கால உறவு உள்ளது. இரு தரப்பிலும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினோம். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி அடைந்திருப்பதை அமெரிக்கா பாராட்டுகிறது என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறது.
கோபத்தில் இந்தியா:
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள இந்த பாராட்டு இந்தியாவை ஆத்திரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏவுகணை மிரட்டல் விடுத்து வரும் சூழலில், பாகிஸ்தானை அமெரிக்கா பாராட்டியிருப்பது இந்திய பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பல இடங்களிலும் தற்போது வரை பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவை தாக்கும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அரசும் உதவிக்கரம் நீட்டுவதாகவும் தொடர்ந்து இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி?
இந்த சூழலில், இந்தியாவுடனான ஏற்றுமதி வரியை அதிகரித்து பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலில், பாகிஸ்தானை அமெரிக்கா பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிக்கலுக்கு இந்தியா எப்படி தீர்வு காணப்போகிறது? அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் 7.26 லட்சம் கோடி வர்த்தகத்தை இந்திய அரசு எப்படி காப்பாற்றப்போகிறது? அடுத்த மாதம் அமெரிக்க செல்லும் மோடி அதிபர் ட்ரம்பை சந்திப்பாரா? போன்ற கேள்விகள் தற்போது பிரதமர் மோடி முன்பு எழுந்துள்ளது.





















