அதிர்ச்சி... ஸ்டான்லி கல்லூரி உள்ளிட்ட 3 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து; மாணவர் சேர்க்கை நடக்குமா?
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளில் குறைகள் இருப்பதாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் - Undergraduate Medical Education Board (UGMEB) சுட்டிகாட்டியது.
குறிப்பாக கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவி (Aadhaar-based biometric attendance), கண்காணிப்பு கேமராக்கள் (footage of cameras) ஆகியவற்றில் இருந்த குற்பாடுகள் சரிசெய்யப்படைல்லை என்று கூறி, படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் இயக்குநர் ஷம்பு சரண் குமார், கல்லூரி முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்தி அளிக்கக்கூடிய வகையில், எனினும், கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் இல்லாத காரணத்தால், அங்கீகாரம் திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உள்ள வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது ஆகியவையே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தக் கல்லூரிகளில் மொத்தமாக 500 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள் உள்ள நிலையில், அங்கீகாரத்தை ரத்து செய்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்தி மலர் கூறும்போது, ''நம்முடைய எல்லாக் கல்லூரிகளிலும் கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவிகள் (Aadhaar-based biometric attendance) உள்ளன. விடுப்பு அல்லது வார விடுமுறை காரணமாக மருத்துவர்கள் சிலர் அதில் பதிவு செய்யாமல் இருந்திருக்கலாம்.
அதேபோல, தட்பவெப்ப சூழல் காரணமாக கேமராக்கள் சில வேலை செய்யாமலோ, கோணம் மாறியோ இருக்கலாம். இவை அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும்'' என்று தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை குறித்தும் பேசிய அவர், ’’நம் கல்லூரிகளில் 2023- 24ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்படாததை உறுதி செய்வோம்’’ என்றும் டாக்டர் சாந்தி மலர் தெரிவித்தார்.