VP Elec CP Radhakrishnan: சிபி ராதாகிருஷ்ணன்.. தமிழ்நட்டிற்கான பாஜகவின் ஸ்கெட்ச்சா? RSS-ன் வெற்றியா? 2 மாங்கா?
VP Elec CP Radhakrishnan: குடியரது துணை தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் மூலம், பாஜக ஒரே கல்லிலில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

VP Elec CP Radhakrishnan: குடியரது துணை தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் மூலம், தமிழ்நாடு தேர்தலுக்கான நடவடிக்கையை பாஜக தொடங்கியுள்ளதாம்.
வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ண அறிவிப்பு:
ஜெகதிப் தன்கரின் ராஜினாமவை தொடர்ந்து காலியான, குடியரது துணை தலைவருக்கான பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நீண்ட நாட்கள் ஆனாலும், பாஜக தலைமையிலான கூட்டணி தங்களது வேட்பாளரை அறிவிக்காமலேயே இருந்தது. இந்நிலையில் தான், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சிபி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், அவரது வெற்றியும் உறுதியாகியுள்ளது.
அரசியல் கணக்குகள்:
பாஜகவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை, குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு அரசியல் கணக்கீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. வடமாநிலங்களில் ஆளுநர்களாக உள்ள ஒருவரே இந்த பதவிக்கு தேர்தெடுக்கப்படலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன. அதேநேரம், ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஒருவரை அந்த பதவிக்கு கொண்டு வரவும் அந்த அமைப்பு தீவிரம் காட்டியதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ திருப்திபடுத்தும் விதமாக சிபி ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவித்து, பாஜக ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஸ்கெட்ச்?
வடமாநிலங்களில் பாஜக பெரும்பாலான மாநிலங்களில் நேரடியாகவோ அல்லது கூட்டணி முறையிலொ ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், தென்மாநிலங்கள் அந்த கட்சிக்கு கடும் சவாலாக உள்ளன. குறிப்பாக தமிழ்நாடு எட்டாக்கனியாவே நீடிக்கிறது. இங்கு வலுவாக காலூன்றவே எல்.முருகன், நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்ட தமிழர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளதோடு, பல தமிழர்களையும் ஆளுநர்களாக நியமித்ததாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அந்த வரிசையிலேயே, தற்போது சிபி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவராக அறிவித்துள்ளதாம். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவை பெற முடியும் என நம்புகிறதாம். குறிப்பாக கொங்கு மண்டலத்தை தனது பலமாக பார்க்கும் பாஜக, அதே பகுதியை சேர்ந்தவரை குடியரசு துணை தலைவராக்குவதன் மூலம், சட்டமன்றத்திற்கு கூடுதல் உறுப்பினர்களை அனுப்ப முடியும் எனவும் திட்டமிட்டுள்ளதாம்.
ஆர்எஸ்எஸ்-க்கு வெற்றி?
தனிப்பெரும்பான்மையை இழந்து ஆட்சி அமைத்தது முதலே பாஜகவின் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆட்சியிலும், அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை தங்களது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கவும் தீவிரம் காட்டுகிறதாம். பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் மட்டுமின்றி, புதிய குடியரசு துணை தலைவர் பதவியும் ஆர்எஸ்எஸ் பட்டியலில் இருந்துள்ளது. இதன் காரணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையில், வேட்பாளரை தேர்வு செய்ய கூட்டணியில் கடும் இழுபறி நிலவியுள்ளதாக தெரிகிறது. இறுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை திருப்திபடுத்தும் விதமாகவும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய நகர்வாகவும் சேர்த்து, கோவையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான சிபி. ராதாகிருஷ்ணனை, குடியரசு துணை தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இதன் மூலம் தேர்தலில் எதிர்பார்த்த பலனை பாஜக அறுவடை செய்யுமா? புதிய தேசிய தலைவர் தேர்விலும் இதேபோன்று ஆர்எஸ்எஸ் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.





















