பிரதமர் ஜவஹர்லால் நேருவால் பாராட்டப்பட்ட சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலைக்கு விருது
கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதால், இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி மாநில அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனமாக தேர்வு
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமும், தற்போது திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் சந்திரசேகரபுரம் கிராமத்தில் ராமச்சந்திர அய்யர் என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவர், மிகவும் பின்தங்கிய, ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் சுலபமாகவும், குறைந்த விலையில், தரமானதாக வழங்க வேண்டும், உணவு பொருட்களுக்காக மக்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கத்தில் ராமச்சந்திர அய்யர், கடந்த 4.12.1944 ஆம் ஆண்டு சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பதிவு செய்து, 9.4.1945 ஆண்டு 101 உறுப்பினர்களை கொண்டு, 3 ஆயிரம் பங்கு மூலதனத்துடன் தொடங்கினார்.
தொடக்க காலகட்டத்தில் ஜவுளி கடை, மளிகை விற்பனை, சைக்கிள், சிமெண்ட், அயல்நாட்டு பொருட்கள் போன்ற விற்பனை பிரிவுகளை தொடங்கி செயல்பட்டது. மேலும் சந்திரசேகரபுரம் கிராமத்தில், தயாரிப்பு பிரிவு தொடங்கப்பட்டு, அரிசி, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள், சீயக்காய்துாள், சேமியா, செக்கு எண்ணெய் போன்ற பொருட்கள் தரமாக தயாரிக்கப்பட்டு, பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்பட்டது. பண்டகசாலையின் செயல்பாடுகளை பாராட்டி, முன்னாள் பாரதப் பிரதமர் ஜவர்ஹலால் நேரு, ராமச்சந்திரஅய்யரை நேரில் வரஅழைத்து பாராட்டியுள்ளார். சிறப்பு மிக்க சந்திரசேகரன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் மறைந்த ஜிகே, மூப்பனார், ராமசாமி, மறைந்த முன்னாள் உள்ளாட்சித்துறை கோசி.மணி, பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைவராக இருந்து, பண்டகசாலையில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். தற்போது, தலைவராக அயூப்கான் என்பவர் பதவி வகித்து வருகிறார். சந்திரசேகரபுரம் மொத்த விற்பனை பண்டக சாலையின் தற்போது, 997 உறுப்பினர்களுடன், கடந்த 7 ஆண்டுகளாக நிகர லாபத்தில் இயங்கி வருகிறது.
பண்டகசாலையில், இரண்டு அம்மா மருந்தகம் மற்றும் ஒரு கூட்டுறவு மருந்தகம் மூலம் பொதுமக்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி விலையில், விற்பனை செய்து வருகிறது பண்டகசாலை 2020-21 வரை தணிக்கையை முடிக்கப்பட்டு 22.5 லட்சம் நேரத்தில் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தாலுக்காவில் உள்ள 429 நியாய விலை கடைகளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
இந்த பண்டகசாலை, கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவதால், இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி மாநில அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டு, தாம்பரத்தில் நடைபெற்ற 68 வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் பாராட்டு கேடயத்தினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பண்டகசாலை தலைவர் அயூப்கானிடம் வழங்கினார். அப்போது, ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தார். மாநில அளவில் சிறந்த கூட்டுறவு நிறுவனத்திற்கான விருதினை சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்தவிற்பனை பண்டகசாலை 2015, 2016, 2017, 2018 மற்றும் 2021 ஆகிய 5 ஆண்டுகளாக பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.