உயிரிழப்பு இல்லாமல் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வரும் அரசு சித்த மருத்துவமனை!
விழுப்புரம் அரசு சித்த மருத்துவனையில், ஆக்சிஜன் அளவு குறைந்தாலும் சிகிச்சை அளித்து நோயாளிகளை குணமாக்கி சாதனை படைத்து வருகின்றனர்.
விழுப்புரம் அரசு சித்த மருத்துவனையில் இதுவரை 493 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
விழுப்புரம் அருகே கொரோனா சிகிச்சைக்காக சித்த மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமம் பகுதியில் சித்த மருத்துவர் வீரபாபு தலைமையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு, சித்த மருத்துவர்களை சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து சித்தா, ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் சிறப்பு சித்தமருத்துவ மனையில் இதுவரை கொரோனா பாதித்த 493 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. அது மட்டுமல்ல ஆக்சிஜன் மட்டம் குறைந்து மூச்சு விட சிரமப் பட்டவர்கள்கூட குணமாகி சென்றுள்ளனர்.கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆங்கில மருத்துவத்தை அனைவரும் நாடுகின்றனர். சிலர் மட்டுமே சித்த மருத்துவத்தை தேடி வருகின்றனர். அப்படி தேடி வருகிறவர்களை தேற்றி அனுப்புகிறது இந்த சிறப்பு மருத்துவமனை. நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று நாட்களில் குணப்படுத்தப் பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு அனுப்புவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சித்த மருத்துவ ரீதியில் இங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர் பிரபு கூறும்போது, முதலில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் வேப்ப இலை மாத்திரை, தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருத்துவ சூரணம், உரிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு கிராம்பு குடிநீர், ஆடாதோடை சிரப் போன்றவை வழங்கப்பட்டு 10 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்குள் அவர்களுக்கான ஆக்சிஜன் அளவை சீராக்குகிறோம். தினமும் கபசுரக் குடிநீர் நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினமும் கபசுரக் குடிநீர்,நிலவேம்பு குடிநீர் மற்றும் ஐந்து மூலிகை கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் அந்த சிறப்பு மருத்துவமனையில் தயார் செய்யப்படுகிறது. அத்துடன் திருமூலர் பிராண பயிற்சி மற்றும் யோகாசனங்களும் கற்பிக்கப் படுகின்றன.மேலும் சிகிச்சை முடித்து வீடு திரும்புகிறார்களுக்கு ஆரோக்கிய மருத்துவ மருந்துகள் அடங்கிய மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இந்த மருத்துவ மனையில் பிரபு,சுபாஷினி, பொன்மொழி ஆகிய மூன்று மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவதாகவும், ஒவ்வொரு மருத்துவருக்கும் இரண்டு உதவியாளர்கள் ஒரு செவிலியர் உடன் இருப்பதாகவும் தெரிவிக்கிறார் மாவட்ட சித்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் மாலா. 150 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் இருந்து வருவதாகவும் இன்றுவரை 94 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தினந்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர் .
அந்த மருத்துவ குழுவினர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் சித்த மருத்துவத்தை நாடி வருவது இல்லை என்றும் வேதனைப்படுகின்றனர். அரசு சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினால் அதிக அளவில் நோயாளிகள் குணமாகி செல்லுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.