"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்திற்கு செல்லும் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து பேச தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய், பரந்தூருக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் அவர் மக்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பாதுகாப்பு கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு விஜய் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தொடங்கியதை தொடர்ந்து முதல்முறையாக போராட்ட களத்திற்கு செல்ல உள்ளார் விஜய்.
ஆட்டத்தை தொடங்கிய தவெக:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய்யின் மாஸ்டர் பிளான்:
இந்த நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து பேச விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் அவர் மக்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறைக்கு விஜய் தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் பனையூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோல, தலைவர்களின் பிறந்தநாள், நினைவு தினத்திற்கு அவர்களின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தாமல் தன்னுடைய பனையூர் வீட்டில் படங்களை வைத்து மரியாதை செலுத்தி வருகிறார்.
இதனால், விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என மக்கள் வறுத்தெடுத்து வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில், அரசியல் கட்சி தொடங்கியதை தொடர்ந்து முதல்முறையாக போராட்ட களத்திற்கு செல்ல உள்ளார் விஜய்.

