"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
"மணமகன் பெயர் ஸ்டாலின், என்னுடைய பெயர் என்று சொல்வதைவிட ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின் உடைய பெயர். இலட்சிய உணர்வோடு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினருமான வேணுவின் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனக்கு ஸ்டாலின் என பெயர் வைக்க காரணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து பேசிய அவர், "திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரையில், நாம் என்றைக்கும் இருப்போம்; மக்களுக்காக பாடுபடுவோம்; பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு.
"பழனிசாமிக்கு பொறாமை"
ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக்கூடிய முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, பொறாமை தாங்க முடியாமல், திராவிட முன்னேற்றக் கழகம் அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து மக்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருக்கிறதே;
இன்னமும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கின்ற பொறாமையின் காரணமாக செல்லாக்காசாக இருக்கக்கூடிய பழனிசாமி இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்" என்றார்.
சென்னை மழையின்போது மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இப்போது ஆட்சி என்கின்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கும் மக்களை சந்தித்து, மக்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்து அந்தப் பணிகளை செய்கிறோம். சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக நான் வந்தேன்.
துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி வந்தார். அமைச்சர்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தார்கள்.
குறைகளை கேட்டார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள். இது தி.மு.க. ஆனால், மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் நம்முடைய பழனிசாமி. அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார்" என்றார்.
குட்டி கதை சொன்ன ஸ்டாலின்:
தனக்கு ஸ்டாலின் என பெயர் வைக்க காரணம் என்ன என்பதை விளக்கி பேசிய அவர், "அந்த உணர்வோடு, தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையில் வாதாடி, போராடி, உழைத்திருக்கக்கூடிய வேணு இல்ல திருமண நிகழ்ச்சியில் இதை சொல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியோடு, மணமக்களை நான் பல்லாண்டு காலம் வாழ்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
இன்றைக்கு மணமகனாக வீற்றிருக்கக்கூடிய மணமகன் பெயர் ஸ்டாலின், என்னுடைய பெயர் என்று சொல்வதைவிட ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின்-உடைய பெயர். இந்தப் பெயரை பொறுத்தவரைக்கும், இலட்சிய உணர்வோடு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
அதைத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த உணர்வோடுதான் எனக்கும் அந்தப் பெயரை வைத்தார். இன்றைக்கு வேணு குடும்பத்தில் மணமகனாக வீற்றிருக்கக்கூடிய அந்தப் பேரனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
ஆனால், மணமகளுடைய பெயரை பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. யுவஸ்ரீ என்றிருக்கிறது. பெயர் வைத்ததைப் பற்றி நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு என்னுடைய வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்" என்றார்.