Khushbhu: பாஜக சர்ச்சைகள் குறித்து நான் மௌனம் காக்கிறேனா? குஷ்பு காட்டம்..!
தமிழக பா.ஜ.கவிலும், தேசிய பா.ஜ.கவிலும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. தற்போதைய, சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்- குஷ்புசுந்தர்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், கட்சி உறுப்பினருமான கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் சர்ச்சை வீடியோ சமூக ஊடங்களில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில், பாஜகவில் உள்ள மகளிர் தலைவர்கள் மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இந்நிலையில், பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சுந்தர் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரும், பெண்ணியவாதியுமான திவ்யா மருந்தையா சில நாட்களுக்கு முன்பாக, பாஜக-வில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு வழி என்ன?! இப்பவாவது கருத்து சொல்வீங்களா? இல்ல அரசியல் பண்ணிட்டு இருக்கப் போறீங்களா? Show some class என்று கூறி வானதி சீனிவாசன், குஷ்பு சுந்தர், காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு ட்விட்டரில் டேக் செய்திருந்தார்.
பாஜக-வில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு வழி என்ன?! @VanathiBJP @khushsundar @BJP_Gayathri_R இப்பவாது கருத்து சொல்வீங்களா? இல்ல அரசியல் பண்ணிட்டு இருக்கப் போறீங்களா? Show some class.
— Dhivya Marunthiah (She/Her) (@DhivCM) August 26, 2021
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டரில், "பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே செயல்படும் மோசமான திராவிட மனநிலையை தயவுசெய்து வெளிப்படுத்தாதீர்கள். சமூக ஆர்வலராக எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நேரமிருந்தால், தயவுசெய்து எனது முந்தைய ட்விட்டர் பதிவுகளை நன்றாகப் படியுங்கள். பிரபலமடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எங்களை டேக் செய்துள்ளீர்கள். ஒரு பெண்ணாக பொறுப்பற்ற முறையில் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது" என்று பதிவிட்டுள்ளார்.
Pls do not show your attention grabbing poor dravidian mindset. If the so called activist has time Pls read my tweets well. Do not try and get 2 minute fame by tagging us. It's very unfortunate to see a woman behave so irresponsibly an desperately. https://t.co/wsdRZtZSwa
— KhushbuSundar (@khushsundar) August 26, 2021
முன்னதாக, கடந்த 25-ஆம் தேதி தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பாலியல் சர்ச்சை வீடியோ தொடர்பான வீடியோ யூ ட்யூபில் வெளியானது.
வீடியோ வெளியான அன்றே குஷ்பு தனது ட்விட்டரில், “தமிழக பா.ஜ.கவிலும், தேசிய பா.ஜ.கவிலும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. தற்போதைய, சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். பெண்கள் மதிக்கப்படுவது இல்லை என்று ஒட்டுமொத்த கட்சியையும் குற்றம்சாட்டுவது வேதனை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் பிடியில் இருந்து விடுபட்டால் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வீடியோ விவகராம் தொடர்பாக மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை,"நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும் கட்சியின் தலைவருக்கும் அமைப்பு செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சிப்படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதன் வலியுறுத்தினார். அவருக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்? அவரவர் செயலுக்கும் அவரவர் நடவடிக்கைக்கும் அவரவர் தான் பொறுப்பேற்க வேண்டும்"என்று தெரிவித்திருந்தார்.
இதையொட்டி, நடத்தி வந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. இதன்பிறகு, பாஜகவிலிருந்து மதன் ரவிச்சந்திரன் நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், மதன் ரவிச்சந்திரன் தனது மற்றொரு சேனலின் மூலம் ஆடியோவை இன்று வெளியிட்டார். அதில், கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை பொதுவெளியில் வெளியிட அண்ணாமலை தெரிவித்ததற்கான ஆதாரங்கள் இடம்பெற்றிருந்தன.