Sengol: நாடாளுமன்றக் கட்டிடம்; செங்கோல் சைவ சமயம் சார்ந்ததல்ல- அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சோழர்கள் கால மாதிரி செங்கோல் வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து 3 மாநில ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
''ஆட்சி மாற்றத்தைக் குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை உருவாக்கித் தந்த நகைக்கடை உரிமையாளர்களை பிரதமர் கவுரவிப்பார். கடந்த 1978ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சியில் செங்கோல் கதையை அப்போதைய காஞ்சி மடாதிபதி மகா பெரியவர் எடுத்துக் கூறினார்.
இந்தக் கருத்து அவர் 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. இது குறித்த கட்டுரை தனியார் இதழில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. இந்த கட்டுரையை நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார். இதையடுத்து செங்கோலுக்கு தற்போது உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கோல் என்பதற்கு ஆழ்ந்த பொருள் உள்ளது. செங்கோல் என்ற சொல் தமிழ்மொழியின் 'செம்மை' என்ற சொல்லில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'நேர்மை' எனப் பொருள்.தமிழ்நாட்டின் முன்னணி தார்மீக மடத்தின் குருமார்களின் ஆசிகளைப் பெற்றது.கம்பீரமான பார்வையைக் கொண்ட புனிதமான நந்தியுடன்!
பல நூற்றாண்டுகளாக நமது துணை கண்டத்தில் இருந்த பேரரசுகளில் முதன்மையாகத் திகழ்ந்த சோழப் பேரரசின் சொந்தமான இந்திய பாரம்பரியத்திலான வழிமுறை இது.
மிகவும் முக்கியமாக, செங்கோலைப் பெறுபவர் நியாயமாகவும் நடுநிலையுடனும் ஆட்சி புரிவதற்கான ஆணையைப் பெறுகிறார்.இதுதான் மிகவும் ஈர்க்கக்கூடிய விஷயமாக உள்ளது, குறிப்பாக மக்களுக்கு சேவைபுரிவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இதனை மறக்கவே கூடாது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் ஒன்றாக அழைக்கப்படுவர். திருவாவடுதுறை, தர்மபுரி, திருப்பனந்தாள் உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
செங்கோல் சைவ சமயம் சார்ந்தது அல்ல. செங்கோல் குறித்த குறிப்புகள் திருக்குறளில் உள்ளன. அடுத்த 100 ஆண்டுகளுக்கு செங்கோல் நாட்டின் சின்னமாக இருக்கும்''.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாம்: ABP Nadu Exclusive: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு என்ன..? - ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் சிறப்பு பேட்டி