Chennai Growth Hubs: சென்னை..! உச்சம் பெறப்போகும் 9 பகுதிகள் - வீடு, வேலை - குவியும் வாய்ப்புகள், எங்கு? எப்படி?
Chennai Growth Hubs: சென்னையின் எதிர்கால வளர்ச்சி மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 9 பகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Chennai Growth Hubs: சென்னையின் எதிர்கால வளர்ச்சி மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 9 பகுதிகளும், வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றன.
நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னை:
தலைநகர் சென்னையின் பிரதான பிரச்னையாக மக்கள் தொகை உள்ளது. நகரமயமாதல் காரணமாக இங்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளுக்காக, அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்பு என பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டே சென்னை பெருநகராட்சி ஆணையம், மாநகராட்சியை விரிவாக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, பொருளாதார வளர்ச்சிக்கான துணைக்கோள் நகரங்களையும் அமைக்க திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சென்னையின் எதிர்கால வளர்ச்சி மையங்களாக, ஒன்பது இடங்களை சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
சென்னையின் எதிர்கால வளர்ச்சி மையங்கள்:
சென்னையில் நெரிசலைக் குறைத்தல், பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துதல், நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் இந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த பட்டியலில்,
- மீஞ்சூர்
- திருவள்ளூர்
- திருமழிசை
- ஸ்ரீபெரும்புதூர்
- பரந்தூர்
- காஞ்சிபுரம்
- மறைமலைநகர்
- செங்கல்பட்டு
- மாமல்லபுரம்
ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பகுதிகள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என குறிப்பிட்ட சில துறைகளில் சிறந்து விளங்குகின்றன. அவற்றை சார்ந்து அந்த வளர்ச்சி மையங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
எந்த பகுதியில் எந்தெந்த துறைகள்:
1. பரந்தூர் விமான நிலையம்:
விவசாயிகளின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் பரந்தூரில் புதிய விமான நிலையம் முன்மொழியப்பட்டுள்ளது. இதனை சார்ந்து வணிக மையங்கள், சரக்கு வசதிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட உள்ளதாக், விமான நிலையத்தை மையமாகக் கொண்ட ஒரு நகரமாக பரந்தூர் உருவாக்கப்பட உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உந்துகோலாக விமான நிலையத்தைப் பயன்படுத்தி பரந்தூரை நவீன, நன்கு திட்டமிடப்பட்ட நகர்ப்புற மையமாக மாற்ற திட்டம் தயாரிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. மீஞ்சூர்
வட சென்னையில் எண்ணூர் துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள மீஞ்சூர், தொழில்துறை மற்றும் துறைமுக மையமாக மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் கிடங்குகள், சரக்கு போக்குவரத்து மற்றும் பிற துறைமுகம் தொடர்பான வசதிகளுக்கும் மீஞ்சூரில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
3. திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் பெரியபாளையத்தை ஒட்டி 870 ஏக்கரில் அறிவு நகரத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சிக்கான ஒரு புதுமை மற்றும் ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதிலும், பல தொழில்களில் அதிக மதிப்புள்ள வேலைகளை உருவாக்குவதிலும் அறிவு நகரம் திட்டம் கவனம் செலுத்த உள்ளது.
4. திருமழிசை
திருமழிசை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தொகுப்புகள், அறிவு மையங்கள், மல்டிமாடல் போக்குவரத்து மையங்கள், வணிக மையங்கள் போன்றவற்றுடன் ஒரு புதுமை நகரமாக உருவெடுக்க உள்ளது. முன்மொழியப்பட்ட லூப் சாலை, பயண நேரத்தைக் குறைப்பதோடு, 800–1000 மீட்டர் நடை சுற்றளவில் அணுகலை அதிகரிப்பதையும் உறுதி செய்கிறது. திருமழிசை திட்டம் நிலையான மற்றும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என கருதப்படுகிறது.
5. ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் ஏற்கனவே தொழிர்சாலைகளின் மையமாக விளங்குகிறது. அதனை மேலும் விரிவுபடுத்தி மேம்படுத்துவதன் மூலம், மாநிலத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்படும்
6.காஞ்சிபுரம்
7. மறைமலைநகர்
மறைமலைநகரை உற்பத்தி மையமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
8. செங்கல்பட்டு
செங்கல்பட்டு நகர்ப்புற மையமாக மேம்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் கட்டமைக்கப்பட்ட சூழல்களின் செறிவு கொண்ட பகுதிகள், பெரும்பாலும் நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுடன் தொடர்புடை, வணிகம், கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கான மையமாக செங்கல்பட்டு செயல்பட உள்ளது.
9. மாமல்லபுரம்
மகாபலிபுரம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த நகரமாகவும் இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.
வளர்ச்சி மையங்களின் நோக்கம் என்ன?
சென்னை பெருநகரப் பகுதியைச் சுற்றி நகர்ப்புற வளர்ச்சி மையங்களை நிறுவுவது என்பது, பொருளாதார வாய்ப்புகளை வளர்ப்பது, இணைப்பை மேம்படுத்துவது மற்றும் பிரதான நகரமான சென்னையின் மீதான அழுத்தத்தைக் குறைப்பது, உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், வாழ்வாதாரத்திற்காக ஒரே இடத்தில் அதிகப்படியான மக்கள் குவிவது தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த வளர்ச்சி பகுதிகளில் உள்ள நிலம் மீது முதலீடு செய்வது போன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















