Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், மீண்டும் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று இரவு வரை மிதமான மழைப் பொழிவு இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
புயல் உருவாவதில் தாமதம்
வங்கக் கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், மீண்டும் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை, நாளை மறுநாள் எப்படி?
நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழக வட மாவட்டங்களில் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் அதிக கன மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புயல் குறித்துக் கணித்ததில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புயல் குறித்த கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை. டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை, இன்றைய பகல் மற்றும் இரவுப் பொழுதில் மிதமான மழை இருக்கும். குளிர் காற்றை அனுபவியுங்கள்.
மழையின் தீவிரம் அதிகரிக்கும்
29ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 30ஆம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும். டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளிலும் மழைப் பொழிவு ( pull effect rains) இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ.28) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் சென்னை மற்றும் பிற கடலோர மாவட்டங்களுக்கு விடுமுறை எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க மறக்காதீங்க: Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை