''எடுத்த பொருளையெல்லாம் திரும்ப வச்சிருங்க'' - கனியாமூர் கிராமத்தில் தண்டோரா அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது தூக்கிச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்க கோரி கனியாமூர் கிராமத்தில் தண்டோரா அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தின் போது தூக்கிச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்க கோரி கனியாமூர் கிராமத்தில் தண்டோரா அறிவிப்பு. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி வேண்டும் என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. கலவரத்தின் பள்ளி கட்டிடங்களை சூரையாடிய போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள், பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலிகள், மாணவர் இருக்கை மற்றும் மேஜைகள், மின் விசிறிகள், குளிர் சாதனப் பெட்டி உட்பட பள்ளி வளாகத்தில் இருந்து ஆடு, மாடு, கோழிகளை பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் எடுத்துச் சென்றனர்.
இதன் வீடியோ காட்சிகளும் கலவரத்திற்கு பிறகு வெளியானது. இந்த நிலையில், பள்ளிக் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள சூழலில், பள்ளியிலிருந்து எடுத்துச் சென்ற பள்ளியின் உடமைகளை தூக்கிச் சென்றவர்கள், போலீஸார் விசாரணைக்கு உள்ளாக நேரிடும். ஆகவே எடுத்து சென்ற பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைத்துவிடும் படி, சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், கிராம உதவியாளர் கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
கலவரத்தின் போது தூக்கிச் சென்ற பொருட்களை ஒப்படைக்க கோரி கனியாமூரில் தண்டோராhttps://t.co/wupaoCQKa2 | #Kallakurichi #KallakurichiStudentDeath #கள்ளக்குறிச்சி #KallakurichiNews pic.twitter.com/mRcWkcCEws
— ABP Nadu (@abpnadu) July 20, 2022
காவல் துறை நடைவடிக்கை :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் தொடர்புடையவர்கள் என 128 பேரை சின்னசேலம் போலீஸார் (திங்கள்கிழமை) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 20 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கலவரத்தில் முடிந்தது. இது தொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் 128 பேர் மீது 147 (சட்ட விரோதமாக கூடுதல்),148(ஆயுதங்களுடன் கூடுதல்) ,294(b) (ஆபாசமாக பேசுதல்), மற்றும் 323,324, 352, 332, 336, 435, 436,379,IPC.r/w.3,4,5.of பொதுச் சொத்தை சேதப்படுத்துதல், உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.