CM Stalin: அக்கா போட்ட ஃபோன் கால் - மருத்துவமனைக்கு விரைந்த முதலமைச்சர் ஸ்டாலின்: துரை தயாநிதி எப்படி இருக்கிறார்?
CM Stalin: வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
CM Stalin: வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன், சபரீசன் மற்றும் அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
துரை தயாநிதிக்கு தொடர் சிகிச்சை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரரான, மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக நீண்ட நாட்களாக உயர்தர மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி சென்னை அப்போல்லோ மருத்துவ மனையில் இருந்து வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, A வார்டில் அவருக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக தொடர் உயர் ரக சிகிச்சை பெற்று வருகிறார்.
நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்:
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, துரை தயாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அதனைத் தொடர்ந்து துரை தயாநிதிக்கு சிகிச்சை அளித்து வரும் 10 பேர்கொண்ட சி.எம்.சி மருத்துவக்குழுவிடமும் பிசியோதெரபி ஸ்பெஷலிஸ்ட் குழுவிடமும் சிகிச்சை முறைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது. 30 நிமிட நலம் விசாரிப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து சி.எம்.சி.மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் உடல் நலம் நல்ல முன்னேற்றம் பெற்று இருப்பதாகவும் எழுந்து நடப்பதாகவும், பிசியோதெரபி சிகிச்சையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வேலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த முதலமைச்சர், சி.எம்.சியில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் துரை தயாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அக்கா போட்ட ஃபோன் கால்:
முதலமைச்சர் ஸ்டாலினின் அக்கா செல்வி, அண்மையில் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதியை சந்தித்துள்ளார். தொடர்ந்து, ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த முறை வந்தபோது இருந்ததை விட, துரையின் உடல் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என கூறியுள்ளார். அதைதொடர்ந்து தான், முதலமைச்சர் ஸ்டாலினே இரண்டாவது முறையாக நேரில் சென்று நலம் விசாரித்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
துரை தயாநிதிக்கு என்ன பிரச்னை?
மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் துரை தயாநிதிக்கு, மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த பாதிப்பிற்கு தான் துரை தயாநிதி தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.