தஞ்சை மாணவி பேசிய செல்போன் வீடியோ போலீசிடம் ஒப்படைப்பு - விஹெச்பி மாவட்ட செயலாளரிடம் போலீஸ் விசாரணை
’’நான் பக்கா திமுக. 25 ஆண்டுகாலமாக இருந்து வருகின்றேன். எனக்கு உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளார்கள். எனது மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து எந்த திமுககாரர்களும், என்னை வந்து பார்க்க வில்லை’’
தஞ்சை பள்ளி மாணவி இறப்பு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட விடியோ பதிவு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதியம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது.
இதன்படி, தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூல அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, பிளஸ்- 2 மாணவி பேசியதாக கூறப்படும் வீடியோ பதிவை தஞ்சாவூர் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, வீடியோ பதிவு கொண்ட செல்போனை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தாவிடம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் பி.முத்துவேல் ஒப்படைத்தார். அப்போது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகளை பள்ளியில் சேர்க்கும் போது, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எங்களிடம் மதம் மாறு, பள்ளி நிர்வாகத்தின் வற்புறுத்தினர். அப்போது நாங்கள் முடியாது என்று கூறவே, எங்களுக்கும், பள்ளி நிர்வாகத்தினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன் பிறகு பள்ளி நிர்வாகத்தினர் எந்தவிதமான தொந்தரவும் செய்ய வில்லை என நாங்கள் விட்டு விட்டோம். அடிக்கடி நாங்கள் மாணவியை பள்ளிக்கு சென்று பார்ப்போம். மாணவியும் வீட்டிற்கு வந்து விட்டு செல்வார்.
இந்நிலையில் விஷமருந்தியதையடுத்து, எங்களிடம், மகள் கூறுகையில் மதம்மாறு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகினர். மதம்மாற மாட்டேன் என்று கூறவே, உனது டிசியில், ரிமார்க் குறித்து விடுவோம். அதன் பிறகு எங்கு சென்றாலும் படிக்க முடியாது என மிரட்டியுள்ளதாக கூறினார். எனது மகளை கட்டாயமாக மதமாற்ற முயற்சி செய்ததால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்றார்.
பின்னர் வெளியே வந்த முத்துவேல் நிருபர்களிடம் கூறுகையில், எனது குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியைப் பார்ப்பதற்காக ஜனவரி 17 ஆம் தேதி சென்றேன். பெற்றோர் கூறியதின் அடிப்படையில் மாணவி பேசியதைக் கைப்பேசியில் பதிவு செய்தேன். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கைபேசியை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தேன் என்றார்.
பின்னர் மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் பக்கா திமுக. 25 ஆண்டுகாலமாக இருந்து வருகின்றேன். எனக்கு உறுப்பினர் அட்டை வழங்கியுள்ளார்கள். எனது மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து எந்த திமுககாரர்களும், என்னை வந்து பார்க்க வில்லை. அடுத்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திமுக என்ற கட்சி சார்பில் கூட பார்க்க வரவேண்டாம். மனிதாபிமானத்தோடு கூட வந்து பார்த்திருக்கலாம் என திமுக உறுப்பினர் அட்டையுடன் தெரிவித்தார்.
காலை 9.50 மணிக்கு லாவன்யாவின் பெற்றோர், அரியலுார் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முத்துவேல், பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஞானசேகரன், அரியலுார் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் விஜயகுமார், தஞ்சை மாவட்ட செயலாளர் முரளிதரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நேதாஜி மற்றும் பாஜக, விஷ்வ ஹிந்த பரிஷத் நிர்வாகிகள் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மின்சாரம் இல்லாததால், ஜென்ரேட்டர் வரவழைக்கப்பட்டு, டிஎஸ்பி பிருந்தா முன்னிலையில், காலை 10.51 க்கும் சித்தி சரண்யா விசாரணைக்கு சென்று, 11.32 க்கு வெளியில் வந்தார். பின்னர், தந்தை முருகானந்தம் 11.38 உள்ளே சென்று 12.36 க்கு வெளியில் வந்தார். அதன் பின்னர் முத்துவேல் 1.03 க்கு உள்ளே சென்று 1.15 க்கு செல்போனை ஒப்படைத்து விட்டு வெளியில் வந்தார்.