TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தமிழக வெற்றிக் கழகத்துடனானா கூட்டணி திட்டம் தொடர்பாக அதிமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
TVK ADMK: சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய இன்னும் காலம் இருப்பதாக, அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தவெக உடன் கூட்டணி இல்லையா?
அதிமுக உடன் கூட்டணி என செய்திதாள்களில் வெளியான தகவலை மறுத்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், தவெகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ” கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஏற்கனவே தெளிவாக ஒரு பதிலை கூறியுள்ளார். பாஜ அல்லாத ஒத்தக் கருத்துள்ள கட்சிகள், அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம். தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சி எங்கள் கூட்டணிக்கு வரலாம். தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை விஜய் உள்ளிட்ட எந்தக் கட்சிகளுடனும் அதிமுக பேசவில்லை. அப்படி ஒரு செய்தி வந்தது தவறான செய்தியாகும். செய்தித்தாள் தகவல் அடிப்படையிலேயே தவெக மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளன. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றி வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே அதிமுகவின் நோக்கம். அதையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியையும் ஏற்கும் கட்சிகளுடன், தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தவெக நிலைப்பாடு என்ன?
முன்னதாக நேற்று தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச்செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகையப் பொய்யானச் செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்” என என். ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார்.
தனித்து பெரும்பான்மை காண்போம் அல்லது தங்களது தலைமையிலான கூட்டணி என தவெகா வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுகவும் தங்களது தலைமையிலேயே கூட்டணி அமையும் என பேசி வருகிறது. அதேநேரம், தவெக உடன் கூட்டணி இல்லை எனவும் ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.