African Catfish: சேலத்தின் பிரபல ஏரியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி! பொதுமக்கள் அதிர்ச்சி!
சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியை முறையாக தூர்வாரி ஆப்பிரிக்கன் செளுத்தி வகை மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
சேலம் மாநகர் போடிநாயக்கன்பட்டி ஏரியானது சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த பகுதியில் இந்த ஏரியானது மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த ஏரியானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு தூர்வாரி அழகுபடுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் ஏரியை திறப்பு விழா செய்ய வேண்டும் என்பதற்காக, பணிகள் தற்போது அவசரக் கதியில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆட்சியரிடம் புகார்:
இந்த நிலையில் போடிநாயக்கன்பட்டி ஏரியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியிருக்கும் தண்ணீரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் ஏராளமாக இருப்பதாக தெரியவந்தது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஏரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்படி இன்று ஏரியை ஆய்வு செய்த மீன்வளத் துறை அதிகாரிகள் ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது ஏரியில் சுமார் 20 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்கன் செளுத்தி மீன்கள்:
இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படுவது உடன் புற்றுநோய் அபாயமும் உள்ளது. இது மட்டுமின்றி ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரியில் உள்ள மற்ற வகை மீன்களை உட்கொள்ளும். இதனால் இங்கு மக்கள் உணவாக பயன்படுத்தும் மீன் வகைகள் அழிந்துவிடும் என்பதால் மீன்வளத் துறை அதிகாரிகள் ஆப்பிரிக்கன் கழுத்து வகை மீன்களை பறிமுதல் செய்தனர்.
ஏரியில் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் பிடிபட்டுள்ளதால், ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்ற வேண்டும். பின்னர் அதில் மேலும் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் இருக்கின்றனவா? என்று உறுதி செய்து, அதனை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை:
ஏரியை முறையாக தூர்வாரி ஆப்ரிக்கன் செளுத்தி வகை மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் ஏரி தூர்வாரி அழகு படுத்தினாலும் ஏரிக்கு நீர் வரக்கூடிய நீர்வழி பாதைகள் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் நீர் வழி பாதை இல்லாத நிலையிலேயே இந்த ஏரி உள்ளது. எனவே நீர் வழி பாதையை ஆக்கிரமிப்பு அகற்றி ஒழுங்கு படுத்தினால் தான் இந்த ஏரி தூர்வாரியது பொதுமக்களுக்கு பலன் அளிக்கும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.