ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
ADMK Meeting: பரபரப்பான சூழலில் கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு:
அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, இன்று காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு
அடுத்த 15 மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக கூட்டணி டெபாசிட்டை இழந்தது. இதையடுத்து, மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்தும் இன்றைய பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பகுதிகளில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால், அதுதொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் அல்லது தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. மதுரை டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாகவும் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
அடக்குவாரா ஈபிஎஸ்?
இதனிடையே, கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் மூத்த நிர்வாகிகளின் செயல்பாடு தொடர்பாக ஆராய, அமைச்சர்கள் அடங்கிய கள ஆய்வுக்குழு ஒன்றை எடப்பாட பழனிசாமி அமைத்தார். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகள் இடையே அடிதடி மற்றும் தள்ளுமுள்ளு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆய்வுக்குழு தொடர்பான அறிக்கை இன்று சமர்பிக்கப்பட்டால், அதனாலும் ஏதேனும் சர்ச்சைகள் வெடிக்கலாம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது, ராணுவக் கட்டுப்பாட்டில் அரங்கேறும் பொதுக்குழு கூட்டங்களை போன்று, இன்று எடப்பாடி பழனிசாமி வழிநடத்துவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பறந்த பாட்டில்கள்:
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேச முற்பட்டபோது அவருக்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்துதது. அவர் மீது கூட்டத்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்கள் வீசப்பட்டன. இதையடுத்து அவர் அவையிலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமையாக உள்ளார். ஆனால், அண்மைக் காலமாக மூத்த நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதையனைத்தையும் சமாளித்து, கட்சியை வலுப்படுத்தி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற இலக்குடன் கட்சியை வழிநடத்த எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.