Salem Book Fair: சேலத்தில் தொடங்கியது புத்தக திருவிழா; எத்தனை அரங்குகள், பதிப்பகங்கள் விவரம் இதோ
புத்தக கண்காட்சியில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பதிப்பகங்கள் மூலம் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா 2023 தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சியை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
புத்தக கண்காட்சி:
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 பதிப்பகங்கள் மூலம் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த புத்தக கண்காட்சி நேற்று துவங்கி வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தினசரி கலை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இங்கேயே அமர்ந்து புத்தகங்கள் வாசித்து பயன்பெறும் வகையில் வாசிப்பு அரங்குகளும் ஒலி, ஒளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியை பார்க்க வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது பபாசி அமைப்பாளர்கள் சந்தித்தபோது தன்னுடைய சொந்தப் பணத்தை ரூ.1 கோடி வழங்கினார். தொலை நோக்கு சிந்தனையோடு கலைஞர் செய்த செயலால், சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக புத்தகங்கள் விற்பனையாகிறது. அரசு ரூ.30 லட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்தாலும், பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியைப் பெற்றும் சேலத்தில் மாவட்ட ஆட்சியர் சிறப்பாக புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்துள்ளார். தமிழகத்தின் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். சால்வை அணிவிக்ககூடாது எனக் கூறி புத்தகம் மட்டுமே வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு தனக்கு கிடைத்த ஒரு லட்சம் புத்தகங்களை சிறைச்சாலைகளுக்கு முதலமைச்சர் வழங்கியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிர்ணயிப்பதிலே காவல்துறை, வருவாய்துறை சிறப்பாக செய்தாலும், எந்த ஒரு பிரச்சினையும் வராமல் இருக்க புத்தகங்கள்தான் உதவ முடியும். அந்த வகையில் இதுபோன்று புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன" என கூறினார்.
முன்னதாக பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், "சேலம் புத்தகத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், மொழிபெயர்ப்பு நூல்கள் அரங்கு, உள்ளூர் எழுத்தாளர்களின் அரங்கு, செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நாளொன்று 10 ஆயிரம் பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்ல வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச இணைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்படும். 2 லட்சத்திற்கும் மிகாமல் புத்தகங்கள் உள்ளன. உலகத்தின் கவனத்தை ஈர்த்த சிறந்த புகைப்படங்கள், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் புத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோளரங்கம், நடமாடும் அறிவியல் கண்காட்சியும் அமைக்கப்படும். தற்போது புத்தகத் திருவிழா அடுத்த கட்டமாக அறிவுத்திருவிழாவாக அமைக்கப்படும். பொதுமக்களின் அறிவுச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில் புத்தகத் திருவிழா அரசின் சார்பில் நடத்தப்படுகிறது. புதிய சிந்தனைகளை உருவாக்கக்கூடியதாக, பழமைவாதங்கள் ஒழிக்கப்பட்டு புதுமைகள் உருவாக அறிவுப் புரட்சியாக புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது" என பேசினார்.