Anbumani Slams CM Stalin: வன்னியர்களுக்கு அதிகம் துரோகம் செய்த முதல்வர் என்றால் மு.க.ஸ்டாலின்தான் - அன்புமணி ஆவேசம்
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடை எம்.ஜி.ஆர் தயார் செய்து வைத்தார். அதற்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துவிட்டார் என்றும் கூறினார்.

சேலம் மாநகர் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக சார்பில் பாட்டாளி சொந்தங்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், சதாசிவம் உள்ளிட்டோம் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, சேலம் மாவட்டம் என்றாலே பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்றார். பாமக கட்சி துவங்கிய காரணம் ஒடுக்கப்பட்ட வன்னியர்கள் சமுதாயம் முன்னேற்றத்திற்காக. இதற்காக அன்றைய காலத்தில் எம்ஜிஆர் சந்திக்க நேரம் ஒதுக்க முடியாததால்தான். எல்லாம் சமுதாயத்திற்கும் சமூக நீதியை கொண்டு வரலாம் என்ற காரணத்திற்காக 1989 இல் பாமக கட்சி துவங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக நின்று பாமக வெற்றிபெற்ற கட்சி. ஆனால் இன்றைக்கும் இரண்டு தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம். இது வளர்ச்சியா? அன்று தனியாக நின்று இரண்டு தொகுதிகள், ஆனால் இன்று கூட்டணியில் இரண்டு தொகுதிகள். பாமகவுக்கு அப்பொழுது இருந்த உழைப்பை விட, இப்பொழுது இருக்கும் உழைப்பு குறைந்துவிட்டது.
திமுக, அதிமுக தலா 500 ரூபாய் கொடுத்தாலும், நம்முடைய வாக்குகள் உழைப்பு எங்கு போனது. அந்த வாக்குகள் அனைத்தும் மீண்டும் வரவேண்டும். அந்த வாக்கு எங்கும் போகவில்லை. களத்தில் இறங்கி உழையுங்கள் அனைத்தும் கிடைக்கும். ஒரு சில பேர் கூட்டணி கூட்டணி என்று கேட்கிறார்கள் பல்வேறு தொகுதிகளில் தனியாகவே பாமக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது... எனவே கூட்டணி பற்றி யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களை உபரிநீர் மூலமாக, நிரப்ப வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம். முழுமையாக ஏரி குளங்களை நிரப்ப துப்பில்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் வன்னியர்களுக்கு மணிமண்டபம் மட்டும் போதாது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் உள்ளார். தமிழக வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிகம் துரோகம் செய்த முதல்வர் என்றால் மு.க.ஸ்டாலின் தான் எனவும் குற்றம்சாட்டினார்.
அப்போது எம்ஜிஆர், 15 சதவீதம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை எனது கவனத்திற்கு கொண்டு வரவில்லை eன அமைச்சர்களை திட்டினார். தன்னிடம் ஏன் தகவலை கொண்டு வரவில்லை என்று கண்டித்தார். பின்னர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடை எம்.ஜி.ஆர் தயார் செய்து வைத்தார். அதற்குள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துவிட்டார். அதன் பின்னர் கலைஞர் வன்னியர்களுக்காக சில நன்மைகளை செய்துள்ளார். ஜெயலலிதா வன்னியர்களுக்கு நல்லதும் செய்யவில்லை எந்தவித கெட்டதும் செய்யாமல் இருந்தார். எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். ஆனால் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொடுப்பதற்கு மனம் இல்லை என்றார்.
இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ளது. அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள். அனைவரும் களத்தில் இறங்கி கடுமையாக உழையுங்கள். தமிழகத்தில் இனி வரும் எல்லாம் ஆட்சிகளும் கூட்டணி ஆட்சி தான். இனி எந்த கட்சியும் தனியாக ஆட்சிக்கு வரமுடியாது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

