Sengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!
அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் நாம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமித்ஷா கணக்கு போட்டு வரும் நிலையில், அதிமுக MLA-க்களுக்கு இபிஎஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த செயல்பாடுகள் அதிமுகவினர் மட்டுமின்றி பாஜகவினரிடையையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் செங்கோட்டையன். கட்சியில் இருந்த நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறிவருகிறார்.
இதனிடையே, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசியது, நிர்மலா சீதாராமனை சந்தித்தது, சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் எல்லோரும் வெளி நடப்பு செய்தபோது செங்கோட்டையன் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தது என தொடர்ந்து இபிஎஸ்-க்கு எதிரான நிலைப்பாட்டில் செங்கோட்டையன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ந்து இபிஎஸ்-க்கு எதிராக அவர் செயல்பட்டாலும் அவர் மீது அதிமுக இன்னும் எந்த் ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் அண்மையில் சென்னை வந்த அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிசெய்தார். அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்சியும் சேர்ந்து சந்திக்க உள்ளது. பாஜக வுடன் கூட்டணி அமைத்தது அதிமுகவின் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், பாஜக கூட்டணியில் தொடரலாமா அல்லது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டு தனியாக இந்த முறையும் தேர்தலை சந்திக்கலமா என்று ஆலோசனை நடத்த இருக்கிறாரம் இபிஎஸ். இதற்கான செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் இபிஎஸ் கூட்டியுள்ளார்.
இச்சூழலில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நேற்று இரவு விருந்து அளித்தார் இபிஎஸ். இந்த விருந்து நிகழ்ச்சியில் எல்லோரும் கழந்து கொண்ட சூழலில் இபிஎஸ்-மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் நம் கூட்டணி 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர முடியும், அதனால் ஒற்றுமையுடன் செயல்படுங்கள் என்று அதிமுகவினருக்கு அண்மையில் சென்னை வந்த அமித்ஷா அட்வைஸ் வழங்கியதாக தகவல் வெளியானது. ஆனால், தொடர்ந்து இபிஎஸ்-க்கு எதிராக தனது அதிருப்தியை செங்கோட்டையன் வெளிக்காட்டி வருவது அதிமுகவினருக்கு மட்டும் இல்லாமல் பாஜகவிற்கு தலைவலியாக மாறியுள்ளதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.





















