Pakistan PM: செய்யுறதையும் செஞ்சுபுட்டு இப்ப நடிக்கிறீங்களா.? விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் அறிவிப்பு...
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்ததாக ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது பஹல்காம் தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், தாக்குதலின் சந்தேகம் பாகிஸ்தான் பக்கம் திரும்பி, இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்தததை பாகிஸ்தான் பிரதமர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணைக்கு தயார் என அறிவித்துள்ளார்.
பஹல்காமின் நடந்த கொடூர தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயங்கும் ரிசார்ட் ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் கேளிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சுட்டதில், சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இஸ்லாமியர் அல்லாதவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் பரத் பூஷண், தன் மனைவி சுஜாதா மற்றும் 3 வயது மகன் கண் முன்னால், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை, ’நீ இந்துவா என்று பயங்கரவாதிகள் கேட்டுவிட்டுக் கொலை செய்ததாக’ அவரின் மாமியார் தெரிவித்துள்ளார்.
இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கைகள் என்னென்ன.?
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக, இந்தியா பல அதிரடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்துள்ளது. அவை,
- 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
- அட்டாரி எல்லை சோதனைச் சாவடி உடனடியாக மூடப்பட்டது.
- சார்க் விசா திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SPES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு 48 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
- டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் ஒரு வாரத்தில் வெளியேற வேண்டும்.
- இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெறவுள்ளது.
பாகிஸ்தானின் எதிர்வினை என்ன.?
பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆரம்பத்தில் திட்டவட்டமாக மறுத்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப். ஆனால், பின்னர் லஷ்கர்-இ.தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற அமைப்பு ஒன்று இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பது குறித்து பேசிய இந்தியா, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியாவின் இந்த முடிவுகளையடுத்து, பாகிஸ்தானும் பதில் நடவடிக்கைகளை எடுத்தது. சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த பாகிஸ்தான், மேலும் பல நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தது.
இதனிடையே, பேட்டி ஒன்றில், பாகிஸ்தான் பல சூழ்நிலைகளை எதிர்ப்பதற்காக, தீவிரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் பணஉதவிகளை அறித்ததை, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புக்கொண்டார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழலில், தற்போது பஹல்காம் தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் அறிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், பஹல்காம் தாக்குதலில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நடுநிலையான விசாரணைக்கு தாம் தயாராக இருப்பதாகவும், அதே வேளையில், இந்தியாவின் எந்தவித மோதல் நடவடிக்கையையும் எதிர்கொள்ளும் விதமாக தயார் நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுவிட்டு, தற்போது விசாரணைக்கு தயார் என அறிவித்திருப்பது அவர்களின் நடிப்பையே காட்டுகிறது. அரசின் ஆதரவுடனேயே தீவிரவாத கும்பல் செயல்படுகிறது என்ற மிகப்பெரிய உண்மை வெளியான பிறகும், எப்படி விசாணைக்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், அதிலிருந்து எப்படி தப்ப முடியும் என்ற நினைப்பே இல்லாமல், பாகிஸ்தான் இவ்வாறு கூறியிருப்பது, வியப்பாக உள்ளது.





















