Iran Blast: பயங்கர வெடிச்சத்தம்.. வானுயர கரும்புகை.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்.. ஈரானில் நடந்தது என்ன.?
ஈரான் துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அங்கு நடந்தது என்ன என்று பார்ப்போம்.

ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ரஜேயி துறைமுகத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் வானுயர கரும்புகை எழுந்த நிலையில், சுமார் 516 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் ஏற்பட்ட வெடிவிபத்து
இந்த ரஜேயி துறைமுகத்திலிருந்து எண்ணெய் மற்றும் வேதிப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்த துறைமுகம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. இன்று அங்கு மர்மமான முறையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்ட நிலையில், வானுயரத்திற்கு கரும்புகை எழுந்து, நெருப்பும் பற்றி எரிந்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் இதுவரை 516 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறித்து இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த வெடிவிபத்து ஏற்பட்டபோது, சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ஈரான் தலைநகரிலிருந்து ஆயிரத்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இங்கிருந்துதான் நடைபெறுகிறது. ஒரு ஆண்டுக்கு 80 மில்லியன் டன்கள் அளவிலான பொருட்களை இந்த துறைமுகம் கையாள்கிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்களில் தான் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.





















