TN Police Advice: சைபர் கிரைம் பெயர், லோகோவை தவறாக பயன்படுத்தும் போலி கணக்குகள்.. எச்சரிக்கும் போலீசார்...
தமிழ்நாடு சைபர் கிரைமின் அதிகாரப்பூர்வ பெயர், லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி வருவதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையின் ஒரு பகுதியாக, இணைய வழி குற்றப் பிரிவு, அதாவது சைபர் கிரைம் புரிவு செயல்பட்டுவருகிறது. இந்த பிரிவு, மாநிலம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உறுதியாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சைபர் கிரைம் பிரிவு.
தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கை என்ன.?
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அறிக்கை ஒன்றை தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில், சைபர் குற்றப் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, சில நேர்மையற்ற நபர்கள், போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த போலி கணக்குகள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அந்த கணக்குகள் மூலம் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் தெரிவித்துள்ளது சைபர் கிரைம் பிரிவு.
போலி கணக்குகளின் பதிவுகளை நம்ப வேண்டாம் - போலீசார்
இப்படிப்பட்ட போலி கணக்குகள், அதிகாரப்பூர்வ கணக்குகளை ஒத்த பெயர்களையும், அரசின் லோகோக்களையும் பயன்படுத்துவதன் மூலம், மக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போலி கணக்குகளின் பெருக்கம், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவுக்கு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் ஆகியவற்றில் தலா ஒரு கணக்கு, அதாவது @tncybercrimeoff என்ற கணக்கு மட்டுமே இருப்பதால், போலி கணக்குகள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
14 போலி கணக்குகளை கண்டறிந்த சைபர் கிரைம் போலீசார்
மேலும், 10 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகளும், 4 ட்விட்டர் கணக்குகளும், தங்களை அதிகாரப்பூர்வ சைபர் கிரைம் குற்றப்பிரிவு என தவறாக சித்தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த போலி கணக்குகள், அதிகாரப்பூர்வ லோகோ, சுயவிவர பெயர்கள் மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்தை போலவே காட்சிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்குகளை முடக்குவதற்காக, ஆள்மாறாட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அனைத்து போலி கணக்குகளும் அந்தந்த தளங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுரை
ஆன்லைனில், அரசுத் துறைகளைச் சேர்ந்தவை என கூறப்படும் தகவல் தொடர்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எந்த ஒரு சமூக ஊடக கணக்கிலிருந்து வரும் செய்திகளுக்கும் பதிலளிப்பதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான கைப்பிடியில், ஆதார் எண், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்குமாறும், அத்தகைய கணக்குகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அரசாங்க துறைகள் சமூக ஊடக தளங்கள் மூலம் ரகசிய தகவல்களை கேட்காது என்றும், அத்தகைய தகவல்களை பகிர்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதோடு, அத்தகைய இணையதளங்கள் குறித்து புகாரளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930-வை தொடர்பு கொள்ளலாம் என்றும், அப்படி இல்லாவிட்டால், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்குமாறும் தங்களது அறிக்கையின் மூலம், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















