செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்
கொங்கு மண்டலத்தை தனது கோட்டையாக வைத்துள்ள செந்தில்பாலாஜி, எனக்கு பதில் நான் கைகாட்டும் நபர் தான் அமைச்சரவைக்குள் நுழைய வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார். அண்ணாமலையை தோற்கடித்த அரவக்குறிச்சி இளங்கோவை வைத்து செந்தில் பாலாஜி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சொல்கின்றனர்.
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போதும் கொங்கு மண்டலத்தின் அசைவுகளை தனது கண்ட்ரோலில் வைத்திருந்ததாக பேச்சு அடிபட்டது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்ததுமே அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் அமைச்சராக பதவியேற்றதால் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றது அமலாக்கத்துறை. இந்தநிலையில் ஜாமின் வேண்டுமா அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என கறார் காட்டியது உச்சநீதிமன்றம்.
இதனால் செந்தில் பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடத்திய திமுக தலைமை, நிலைமையை சரிகட்ட அவரை அமைச்சரவையில் இருந்து இறக்கும் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. அதனால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதனையொட்டி, மீண்டும் ஒரு மாற்றத்திற்கு தயாராகி வருகிறது அமைச்சரவை.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, தன்னுடைய ஆதரவாளரை அமைச்சரவைக்குள் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளதாக சொல்கின்றனர். அந்தவகையில் அரவக்குறிச்சி இளங்கோவை ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் செந்தில் பாலாஜி. இவர் மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை எதிர்த்து அரவக்குறிச்சியில் களமிறங்கியவர். அண்ணாமலைக்கு செக் வைக்கும் விதமாக இளங்கோவை போட்டியிட வைத்து தீவிரமாக களமாடி வெற்றியை வசமாக்கினார் செந்தில் பாலாஜி.
அண்ணாமலையை தோற்கடித்த இளங்கோவை தற்போது அமைச்சராக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கொங்கு மண்டலத்தை குறிவைத்து எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வரும் நிலையில், தான் பதவியில் இல்லாவிட்டாலும் தன்னுடைய ஆதரவாளரை வைத்து கரூரை தனது கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்பதே செந்தில் பாலாஜியின் டார்கெட்டாக உள்ளது. இந்த காரணத்தையே தலைமை காதுகளுக்கும் கொண்டு சென்றுள்ளார். அதனால் செந்தில் பாலாஜி சொல்லும் நபரையே ஸ்டாலினும் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
ஏற்கனவே 2024 மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் கணபதி ராஜ்குமாரை இறக்கி வெற்றியை வசமாக்கினர். அப்போதும் கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக்குங்கள் என சிறையில் இருந்தே செந்தில் பாலாஜி கைகாட்டியதாகவும், உடனே ஸ்டாலினும் அவருக்கு டிக் அடித்ததாகவும் பேச்சு அடிபட்டது. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிகுந்தவராக செந்தில் பாலாஜி இருப்பதால் அவர் சொல்லும் விஷயங்கள் சரியாகதான் இருக்கும் என்ற நம்பிக்கை ஸ்டாலினுக்கும் இருப்பதாக சொல்கின்றனர்.





















