RCB: ஆர்சிபி-தான் ரோல் மாடல்! ப்ளே ஆஃப் செல்ல இதுதான் ஒரே வழி! கம்பேக்-னா இப்படித்தான் இருக்கனும்
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ், சென்னை. ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு முன்னுதாரணமாக ஆர்சிபி அணி மாறியுள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிந்து ப்ளே ஆஃப்-க்கு செல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் போட்டிகளாக இனி வரும் போட்டிகள் அமைந்துள்ளது.
ப்ளே ஆஃப் வாய்ப்பு:
தற்போதைய நிலவரப்படி குஜராத், டெல்லி, ஆர்சிபி ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடனும், மும்பை, பஞ்சாப், லக்னோ அணிகள் 10 புள்ளிகளுடனும் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல குஜராத், டெல்லி, பெங்களூர் அணிகளுக்கு பிரதான வாய்ப்பு உள்ள நிலையில், மும்பை, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
வழிகாட்டியாக ஆர்சிபி:
அதேசமயம், தற்போது வரை தொடரைவிட்டு எந்த அணியும் வெளியேறாத நிலையில் கொல்கத்தா, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கான வாய்ப்பும் ஓரளவு உள்ளது. ஆனால், அவர்கள் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன் அதிக ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றாக வேண்டும். இது ஒரு அசாத்தியமான விஷயம் என்றாலும், அதை சாத்தியமாக்க இந்த அணிகள் உறுதி கொண்டுள்ளன. அதற்கு முக்கிய காரணம் ஆர்சிபி.
ஏனென்றால், கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த போது, அனைவரும் ஆர்சிபி தொடரை விட்டு வெளியேறிவி்டடது என்றே கணித்தனர். ஆனால், அடுத்து நடந்த 6 போட்டிகளிலும் மிகச்சிறந்த ரன்ரேட்டுடன் அபார வெற்றி பெற்று 4வது இடம் பிடித்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
ஆர்சிபி-யின் இந்த கடினமான போராட்டத்தால் 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ அணிகள் தொடரை விட்டு வெளியேறியது. கடந்த தொடரில் மிக மோசமான சூழலில் இருந்த ஆர்சிபி தங்களை விட பலமிகுந்த அணியாக திகழ்ந்த சன்ரைசர்ஸ், குஜராத், பஞ்சாப், டெல்லி, சென்னை ஆகிய அணிகளை வீழ்த்தி தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.
ரோல் மாடல்:
இந்த நிலையில், இந்த தொடரில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் சென்னை. ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் தற்போதைய நிலையில் தொடரை விட்டு வெளியேறும் அணிகளின் பட்டியலில் முதன்மை அணிகளாக உள்ளது.
இவர்கள் ஆர்சிபி அணி கடந்த தொடரில் சாதித்ததை ஒரு முன்னுதாரணமாக கொண்டு இந்த அணிகள் எஞ்சியுள்ள போட்டியில் களமிறங்க முடிவு செய்துள்ளனர். இதையே சன்ரைசர்ஸ் ஹைதரபாத் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியும், சென்னை பயிற்சியாளர் ப்ளெமிங்கும் கூறியிருந்தனர். கடந்தாண்டு ஆர்சிபி ப்ளே ஆஃப் சென்றதை கொண்டாடியதை கேலி செய்த, விமர்சித்த பலரும் தற்போது அந்த அசாத்திய பயணத்தின் உழைப்பின் வெளிப்பாடே அந்த கொண்டாட்டம் என்பதை உணர்ந்துள்ளனர்.
சூடுபிடித்த ஆட்டம்:
எஞ்சியுள்ள ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு அணிக்கும் சவாலானதாக மாறியுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் மேலே உள்ள அணிகளும் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதனால், இந்த தொடரில் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.





















