UPSC exam: 57-ல் 50 பேர்! நான் முதல்வன் திட்டத்தால் சாதித்த மாணவர்கள்! பூரித்து போன முதல்வர் ஸ்டாலின்
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்.
சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “மாணவர்கள் மீதும் நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை பலன் அளித்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது பாராட்டுகள், வாழ்த்துகள். மக்களின் மனதில் அனைவரும் இடம் பெற வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருந்தது. அந்த கவலையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்.
கல்விதான் நமது ஆயுதம். எந்த இடர் வந்தாலும் கல்வியை விடக்கூடாது. எப்படிப்பட்ட போட்டித்தேர்வாக இருந்தாலும் நமது மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அது பலனளித்துள்ளது.
யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 தமிழக மாணவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர்கள். தமிழ்நாட்டிற்கென அறிவு முகம் இருக்கிறது. தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு என மதிப்பு உள்ளது. தமிழக ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரிகளுக்கு என தனி மதிப்பு உள்ளது. மக்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டு.ம். கடமையை நிறைவேற்றிய தந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதிகாரம் என்பது சக மனிதர்களுக்கும் சமுதாயத்துக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டம் மூலம் படித்த சிவசந்திரன் என்பவர் இந்திய அளவில் 23வது இடத்தை பிடித்துள்ளார். வெளிமாநிலங்களுக்கு சென்றாலும் தமிழ்நாட்டில் இருந்து வந்த உங்கள் பணி சிறக்க வேண்டும். எங்கு பணிபுரிந்தாலும் சமத்துவம், சமூக நீதி, நேர்மையுடன் மக்கள் உயர்வுக்கு பாடுபட வேண்டும். 100 பேராவது யுபிஎஸ்சி தேர்வில் வரும் ஆண்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அரசின் விருப்பம். நாளை உங்கள் பெயரை ரோல் மாடலாக சொல்லும் அளவிற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும். ” எனத் தெரிவித்தார்.





















