Trump Vs China: அவர் புளுகுறாரு.. பேச்சுவார்த்தை எதும் நடக்கல.. ட்ரம்ப்பின் டிராமாவை போட்டுடைத்த சீனா...
சீன அதிபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அப்படி ஏதும் இல்லை எனக் கூறி, ட்ரம்ப்பின் டிராமாவை போட்டுடைத்துள்ளது சீனா.

வரி விதிப்புகளுக்குப் பிறகு, அதைப் பற்றி பேச சீன அதிபர் தன்னை அழைத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவிடம் வரிகள் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீனா கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முற்றிய அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்த நிலையில், சீனாவிற்கு 34 சதவீத வரியை விதித்தார். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கு 34% வரியை விதித்தது சீனா. இதைத் தொடர்ந்து, சீனாவிற்கான வரியை 104%-ஆக உயர்த்தினார் ட்ரம்ப். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, சீனவிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப்.
இதற்கும் பதில் வரி விதிப்போம் என சீனா எச்சரித்த நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சீன விமான நிறுவனங்கள் விமானங்களை வாங்கக் கூடாது எனவும், விமானம் தொடர்பான கருவிகளையும் வாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம், அதாவது 245 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இது சீனாவிற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
இதனிடையே, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதில் சீனா இல்லையென்றும், ஆனால் எதிர்வரும் நாட்களில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் அழைத்ததாக கூறிய ட்ரம்ப் - மறுத்த சீனா
இந்த சூழலில், சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முழு விவரங்களை கூறாமல், “அவர்(ஷி ஜின்பிங்) அழைத்தார், ஆனால் அது அவரது தரப்பிலிருந்து பலவீனத்தின் அடையாளம் என்று நான் நினைக்கவில்லை என்று மட்டும்தான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என சீன வர்த்தக அமைச்சகம் மறுத்துள்ளது. இதேபோல், வரிகள் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த ஆலோசனையோ, பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என்று பதிவு ஒன்றின் மூலமாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமெரிக்கா கூறுவது, தவறாக வழிநடத்தும் செயல் என்றும், வரிப் போரை தொடங்கியது அமெரிக்கா தான் என்றும், அதை உண்மையிலேயே சரி செய்ய விரும்பினால், முதலில் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்தவர்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, சீனாவிற்கு விதித்த வரிகள் அனைத்தையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும் சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருவதால், உண்மையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெற்று, பங்குச் சந்தைகள் மீள வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.






















