Parliament: இதுவரையில்லாத விதவிதமான போராட்டம்.! அனல் மட்டுமல்ல ரத்த கறையும் படிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்
Winter Parliament Session 2024: இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரானது அதானி, ஜார்ஜ் சோரஸ், அம்பேத்கர் , ஹேண்ட் பேக் அரசியல் உள்ளிட்ட பல விதவிதமான போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது.
குளிர்கால கூடத்தொடர்:
கடந்த மாதம் நவம்பர் 25ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரானது, நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரானது, மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தொடர் என்பதால், புதிய சட்டங்கள் என்ன கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்ப்பு வழக்கம் போல இருந்தது.
ஆனால், நிலைமை சற்று வேறாக இருந்தது. நாடாளுமன்றம் ஆரம்பித்ததில் இருந்தே தினமும் விதவிதமான போராட்டத்தில் எதிர்க்கட்சியினர் இறங்கினர்.
குறிப்பாக அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என சொல்லி, முதல் நாள் முதலே நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒன்று கூடி கோஷங்களை எழுப்பினர். இதுமட்டுமல்லாமல் மணிப்பூர் விவகாரம், உத்தரபிரதேசம் சம்பல் பகுதி வன்முறை உள்ளிட்ட விஷயங்களில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி, அதானி போல் மாஸ்க் அணிந்து உரையாடியது, தேசிய கொடியை வைத்து போராட்டம் நடத்தி, அதையே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராகுல்காந்தி கொடுக்க முயன்றது என ஒவ்வொரு போராட்டமும் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது.
ஹேண்ட் பேக் அரசியல்:
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புதிதாக ஹேண்ட் பேக் அரசியலும் வந்தது. பாலஸ்தீனம் மற்றும் பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கு ஆதரவாக எம்.பி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கே, ஹேண்ட் பேக் அணிந்து வந்தார். இதற்கு பதிலடியாக பாஜக தரப்பில் இருந்து சீக்கியர் படுகொலையை நினைவுபடுத்தும் வகையில் 1984 என்ற ஆண்டு பொறித்த ஹேண்ட் பேக்கை பிரியங்கா காந்தியிடம் கொடுத்தனர்.
இப்படி டிசம்பர் 20 வரை நாடாளுமன்றத்தில் தினமும் ஒரு போராட்டம் என நடந்து வந்தது.
அம்பேத்கர் - அமித்சா சர்ச்சை
மேலும், அமைச்சர் அமித்சா, அம்பேத்கர் பற்றி பேசியது நாடாளுமன்றத்தையே கலவரமாக மாற்றியது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் நீல நிற உடையும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். மற்றொரு பக்கம் பாஜகவினரும் போராட்டத்தில் குதித்ததால் 2 தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, பாஜகவைச் சேர்ந்த எம்.பியை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகவும் , அதனால் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் வந்ததாகவும் பாஜக பாஜகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டவர்களுக்கும் காயம் ஏற்பட்டதாகவும் , காங்கிரஸ் தரப்பினரும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இதைத்தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கல் செய்யபட்டடு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் பெரும்பாலோனோர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதுமட்டுமன்றி ,எதிர்க்கட்சிகளிடம் பாகுபாடு காட்டுவதாக கூறி, குடியரசுத்துணைவரை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்ட வந்த தீர்மானமும், வரலாற்றில் இல்லாத நிகழ்வாக இருந்தது. ஆனால், தீர்மானம் ராஜ்யசபாவில் நிராகரிக்கப்பட்டது.
கவலையடையச் செய்த கூட்டத்தொடர்
இப்படியாக, ஒரு பக்கம் நாடாளுமன்றத்தை முறையாக நடத்தவிடவில்லை என இந்தியா கூட்டணியினர் மீது பாஜகவினர் குறை சொன்னாலும், ஆளும் கட்சியினரும் மக்கள் பிரச்னைகளை பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்றும், அதானி உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து விவாதிக்க இடம் தரவில்லை என்றும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
மக்கள் பிரச்னைகளை விவாவித்து, தீர்க்கும் இடமாகவும், நாட்டை அடுத்தகட்ட பாதைக்கு எடுத்துச் செல்வதற்கு விவாதிக்கும் இடமாகவும் நாடாளுமன்றம் இருக்கிறது.
அப்படிபட்ட இடத்தை, அதற்கான காலத்தை பயனுற பயன்படுத்தாமல், ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரும் செயல்படுவது, நாட்டின் வளர்ச்சியையும், மக்களையுமே பாதிக்கும் என்பதால், அரசியல் கட்சியினரின் போக்கானது கவலையடையச் செய்கிறது.