(Source: Poll of Polls)
தமிழக அரசியலில் மேலுமொரு முக்கியமான நாள்! மஞ்சள், சிவப்பு கொடிதான் விஜய் கொடியா ?
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி கொடியினை இன்று அறிமுகப்படுத்துகிறார்.
.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்தி, கட்சி பாடலை வெளியிடுகிறார்.
விஜயின் அரசியல் ஆசை
நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் என்பது இருந்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை என்பது இருந்து வருகிறது. இதனால் வளர்ந்து வரும் நடிகராக இருந்த பொழுதே நடிகர் விஜய், பல்வேறு வகையில் மறைமுகமாக அதற்கென்று கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கினார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, தொகுதிவாரியாக பலப்படுத்தும் பணி நடைபெற்றது.
தொடர் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு
இதன் ஒரு பகுதியாக மாவட்டம் வாரியாக தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வந்தார். இதன் மூலம் தனது ரசிகர் மன்றத்தை முறையாக கட்டமைத்தார். இதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போட்டியிட வைத்தார். நகர்புற தேர்தலில் அவரது ரசிகர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கிடைத்திருந்தது.
மாணவர்கள் சந்திப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற, மாணவ மாணவிகளை சந்தித்து பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறார். அவப்பொழுது மாணவர் சந்திப்பு கூட்டத்தில் அவர் நேரடியாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை முன்வைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சி தொடக்கம்
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதற்காக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கட்சி உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.
கட்சிக்கொடி அறிமுகம்
இந்தநிலையில் நடிகர் விஜய் இன்று அவரது பனையூர் அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை மஞ்சள் நிற கொடியில் அவரது உருவம், பதித்த கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்தார். இன்று அவர் ஏற்ற உள்ள கொடியில், மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் இடம் பெறும் எனவும், நடுவில் விஜய் புகைப்படம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன ?
உள்ளரங்கில் நடைபெறும் விழா என்பதால், விஜய் வரும் சாலையில் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. சுமார் 300 நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் இருந்து கட்சிக்கொடி அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சரியாக 9:15 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி கழகக் கொடியை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.