MK Stalin: "நம்மை நம்பி நாம்" முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டம்..!
ஒவ்வொரு அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈகோ மோதலோ, பிரச்னையோ வராமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு அமைச்சரின் பொறுப்பு என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. துணை முதல்வராக பதவி உயர்த்தப்பட்ட உதயநிதி, மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செந்தில்பாலாஜி, புதிய அமைச்சர்கள் என கூடிய கூட்டத்தில் தமிழ்நாடு குறித்து பல முக்கிய விவாதங்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கின்றன. காலம் அவ்வளவு வேகமாக ஓடிவிடும் என்பதால் மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அரசின் திட்டங்கள் சரியாக மக்களை போய் சேருகிறதா என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, அப்படி அதில் ஏதும் குளறுபடி இருந்தால் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பொறுப்பு அமைச்சர்களே மாவட்ட வெற்றிக்கு பொறுப்பு
அதே நேரத்தில், அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அமைச்சர்கள் அந்த மாவட்டத்தின் பிரச்னைகளை தீர்ப்பதிலும் மக்களின் குறைகளை களைவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலில் உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு உங்களின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கும். எனவே, இனி ஒவ்வொருநாளும் தேர்தலை எதிர்நோக்கிய நாளாக இருக்கும். எனவே, மாவட்ட மக்களுக்கு எந்த வகையில் எல்லாம் உதவி செய்து, அவர்களை முன்னேற்றம் அடைய வைக்க முடியுமோ அவ்வளவும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர், அந்த மாவட்டத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்களே பொறுப்பு என எச்சரித்துள்ளார்.
துறை ரீதியாக ரிப்போர்ட் கேட்ட முதல்வர்
அதோடு, ஒவ்வொரு துறை அமைச்சர்களும் எப்படி செயல்படுகின்றீர்கள், என்னென்ன திட்டங்களை எப்படி செயல்படுத்துகின்றீர்கள், அதனால் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது, நடவடிக்கை எடுப்பது, தவறுகளை கண்டறிந்து திருத்துது என அனைத்து துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து இனி மாதந்தோறும் ரிப்போர்ட் அளிக்க வேண்டும் என்று, நீங்கள் அளிக்கும் அறிக்கை இல்லாமல் என்னுடைய குழுவினர் தனியாக ஒரு அறிக்கையை துறை வாரியாக தயாரித்து எனக்கு கொடுப்பார்கள் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
”நம்மை நம்பி நாம்” தேர்தலில் இதுதான் வெல்லும்
அதே நேரத்தில் ஒவ்வொரு அமைச்சரும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈகோ மோதலோ, பிரச்னையோ வராமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு அமைச்சரின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது உங்களை நம்பிதான் அதாவது ”நம்மை நம்பி நாம்” என்ற அடிப்படையில்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தேர்தல் வர இன்னும் பல நாட்கள் இருந்தாலும் 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் என திமுக தலைவராக இப்போதே அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். இப்போது, அமைச்சர்கள் மூலம் மாவட்டம் தோறும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். திமுக இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.