பாஜக-விற்கு எதிராக திரும்பும் ஓபிஎஸ்? பழைய பன்னீர்செல்வமா வர புது ரூட்டு!
தமிழக அரசியலில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த ஓ.பன்னீர்செல்வம் புதிய பாதையில் பயணிக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆனால், முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது.
கழட்டிவிட்ட பாஜக:
அதிமுக முழுவதும் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் சென்ற நிலையில், அதிமுக-வை கைப்பற்றுவேன் என்ற தினகரனும் பாஜக கூட்டணியில் மவுனமாக இருப்பதாலும் நிர்கதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைமையை நம்பியிருந்தார். ஆனால், ஆடி திருவாதிரை விழாவிற்கு வந்த பிரதமர் மோடியும் ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்காமல் தவிர்த்து விட்டார்.

முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதாவின் விசுவாசி என்று பெயர் பெற்று மிகவும் சாதுவான போக்கை கடைபிடித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பாணியை மாற்றினால் மட்டுமே இனி தமிழக அரசியலில் நீடிக்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார். குறிப்பாக, தன்னை தவிக்கவிட்ட பாஜக-விற்கு பாடம் புகட்டவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோடியா? லேடியா?
இதன் எதிரொலியாகவே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு எதிரான அவரது கண்டன அறிக்கையும் அமைந்துள்ளது. பாஜக-வின் கூட்டணியில் இருந்து 1999ம் ஆண்டு வெளியேறியது ஜெயலலிதாவின் வரலாற்றுப் பிழையல்ல என்றும் அது வரலாற்றுப் புரட்சி என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், லேடியா? மோடியா? என்று சவால்விட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என்றும் தெரிவித்துள்ளார். அதிமுக-வை கைப்பற்றுவதற்கும், அதிமுக-வில் மீண்டும் இணைவதற்கும் பாஜக பக்கபலமாக இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதி வந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் உள்ளே வருவதற்கு பாஜக எந்த துணையும் புரியாமல் இருப்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
இனி அதிரடி அரசியல்தான்:
மேலும், தன் ஆதரவாளர்களுக்கு தன் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கவும், மீண்டும் தமிழக அரசியலில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் எதிர்ப்பு அரசியலில் தீவிரமாக களமிறங்கவும் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இன்று காலை நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இந்த சந்திப்பில் அவர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் கடந்து சில அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. மதுரையில் விரைவில் மாநாடு நடத்த உள்ள ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்த வைக்கும் பல தகவல்களை பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் புதியதாக அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்றும், அவர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் பாஜக-விற்கு எதிராக முதன்முறையாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.




















