Kavin Murder: நானும், கவினும் உண்மையாக காதலித்தோம்.. காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ்
நானும், கவினும் காதலித்தோம் என்றும், இந்த கொலை வழக்கில் எனது தந்தைக்கும், தாய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுபாஷினி பரபரப்பு வீடியோ ரிலீஸ் செய்துள்ளார்..

நெல்லையில் கவின்குமார் என்ற பொறியியல் பட்டதாரி என்ற இளைஞர் சுபாஷினி என்ற பெண்ணை காதலித்ததால், அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் வெட்டிக்கொலை செய்தார். கவின் பட்டியலின சாதி என்பதால் அவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்பு இல்லை:
இந்த நிலையில், கவினின் காதலி சுபாஷினி என்ற இளம்பெண் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கும் கவினுக்கும் உள்ள உறவு என்னவென்று யாருக்கும் தெரியாது என்றும், கவின் கொலையில் தனது அப்பா மற்றும் அம்மாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். எங்கள் காதலை வீட்டில் தெரிவித்திருப்பதற்கு அவகாசம் தேவைப்பட்டது. மே மாதமே நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது தம்பி சுர்ஜுத் பார்த்துவிட்டு வீட்டில் தெரிவித்துவிட்டான். அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
‘’அப்பாவை ரிலீஸ் பண்ணுங்க கவினுக்கும் எனக்கும்..’’சுபாஷினி பகீர் வீடியோ#subashini #kavinmurder #honorkilling #viralvideo pic.twitter.com/lqN5qzfzvY
— ABP Nadu (@abpnadu) July 31, 2025
சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், சுர்ஜித்தின் தந்தை சரவணன் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது தாய் கிருஷ்ணகுமாரி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுபாஷினி வீடியோ ரிலீஸ் செய்துள்ளார்.
மேலும், சுபாஷினி எங்களைப் பற்றி யாரும் இனி தவறாக பேச வேண்டாம் என்றும், எனது பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க நினைப்பது தவறு என்றும், எனது அப்பாவை விட்டுவிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கவின் கொலை செய்யப்பட்டது ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அமைந்துள்ளது ஆறுமுகமங்கலம். இந்த பகுதியில் வசித்து வந்தவர் கவின்குமார் செல்வகணேஷ். கவின்குமார் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த சுபாஷினி சித்த மருத்துவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கவின் பட்டியலினத்தவர் என்பதாலும் சுபாஷினி மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்த சுபாஷினியின் தம்பி சுர்ஜித் கோபம் கொண்டார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கவினை சுர்ஜித் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
ஆணவப் படுகொலை:
சுர்ஜித் செய்த இந்த ஆணவப்படுகொலை ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இந்த ஆணவப்படுகொலை விவகாரத்தில் சுர்ஜித்தின் தந்தைக்கும், தாய்க்கும் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. ஏனென்றால், சுபாஷினியின் பெற்றோர்கள் இருவரும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள்.
இந்த நிலையில், கவினின் கொலை விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கவினின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர்களை தூத்துக்குடி எம்பி கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.




















