ஈஷா யோகா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் - பெ.மணியரசன் வலியுறுத்தல்..
கோவையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும் என பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவையில் ஈஷா யோகா மையத்தை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களாகவே ஜக்கி வாசுதேவ், தமிழகத்தில் உள்ள கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து விடுவித்து, மீண்டும் பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ’கோவில் அடிமை நிறுத்து’ என்ற பெயரில் வலியுறுத்தி வருகிறார். அவரது வலியுறுத்தலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலவையாக உள்ளன.
இந்த நிலையில், சென்னையில் இன்று தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் ”ஜக்கி வாசுதேவின் அறநிலையத்துறையை கலைக்கும் முயற்சி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நோக்கங்களை ஒத்ததாக உள்ளது. மேலும், ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா மையம் சட்டத்திற்கு புறம்பாக மலைப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்களது வழிபாட்டு முறை தமிழ் சிவநெறி-திருமால் நெறிக்கு புறம்பாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே அவர் நடத்தி வரும் ஈஷா மையத்தை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.