Haryana Election 2024: ஹரியானா தேர்தல் வெற்றி - பாஜகவின் புதிய மந்திரம், 4 மாநிலங்களில் ஜாக்பாட், தென்னிந்தியாவில் அவுட்
Haryana Election 2024: பாஜகவின் புதிய தேர்தல் மந்திரத்தால் நான்காவது மாநிலமாக, ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது,
Haryana Election 2024: தேர்தல் கருத்துகணிப்புகளை பொய்யாக்கி, ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
ஹரியானாவில் பாஜக வெற்றி:
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. இந்த முடிவு, காங்கிரசுக்கு அமோக கிடைக்கும் என கணித்த கருத்துக் கணிப்புகளை முறியடித்துள்ளது. ஹரியானாவில் பாஜகவின் வரலாற்று வெற்றியானது, அக்கட்சிய்ன் ஒரு புதிய தந்திரத்தின் பலனாக உள்ளது. 10 ஆண்டுகால ஆட்சியின் மீதான அதிருப்தி, பதவிக்கு எதிரான மற்றும் கட்சியின் வாய்ப்புகளை அச்சுறுத்தும் வகையில் தோன்றிய சாதி அரசியலை கடந்து பாஜக இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது.
முதலமைச்சரை மாற்றிய பாஜக:
தேர்தலுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பாக, அப்போதைய முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக நயாப் சிங் சைனியை புதிய முதலமைச்சராக கட்சி தலைமை நியமித்தது. 2019 தேர்தலில் கட்டார் தலைமையில் பாஜக போட்டியிட்டது. ஆனால் கட்சி பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக ஜனதா கட்சியின் (ஜேஜேபி) ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்தது. 2024 தேர்தலில் பெரும்பான்மையை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், பாஜக மாநில தலைமையை மாற்றியது. கட்சியின் புதிய முகமாக சைனியை நியமித்தது. அஹன் விளைவாக தற்போது பாஜக, ஹரியானாவில் தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது.
பாஜகவின் புதிய மந்திரம்:
தேர்தலுக்கு முன் முதலமைச்சரை மாற்றும் இந்த புதிய ஃபார்முலாவை உத்தராகண்ட், திரிபுரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி பெரும்பாலான இடங்களில் சாதகமான முடிவுகளையும் பாஜக அறுவடை செய்துள்ளது. அதன்படி,
- குஜராத்தில் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானியின் பதவிக்காலம் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, அவருக்கு பதிலாக பூபேந்திரபாய் படேல் 2021ம் ஆண்டு புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
- உத்தராகண்டிலும் வாக்காளர் ஆதரவைத் தக்கவைக்க முதலமைச்சர் திரத் சிங் ராவத்திடம் இருந்த முதலமைச்சர் பதவி புஷ்கர் சிங் தாமிக்கு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த திட்டம் பின்னடைவைச் சந்தித்தாலும், 6 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வெற்றியை தேடி தந்தது.
- திரிபுராவில் 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பிப்லப் குமார் தேப் வசம் இருந்த முதலமைச்சர் பதவி மாணிக் சாஹாவிடம் ஒப்படைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.
- இந்த வரிசையில் தான், மாநிலத்தில் நிலவிய கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஹரியானா முதலமைச்சர் பதவி வகித்த மனோகர் லால் கட்டார் இடத்திற்கு நயாப் சைனிக் தேர்வு செய்யப்பட்டார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓபிசி) சேர்ந்தவர் சைனி. இதன் மூலம் ஜாட் மற்றும் தலித் வாக்காளர்கள் மத்தியில் காங்கிரஸின் பெருகிவரும் ஆதரவிற்கு எதிராக, ஜாட் அல்லாத வாக்காளர்களை ஒருங்கிணைகும் பாஜகவின் திட்டம் அவர்களுக்கு நல்ல பலனை அளித்ததாக நம்பப்படுகிறது.
தென்னிந்தியாவில் சொதப்பல்:
தலைமைத்துவத்தை அவ்வப்போது புதுப்பிக்கும் பாஜகவின் தந்திரம், பல்வேறு மாநிலங்களில் கட்சியின் நிலையான வெற்றியை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஹரியானா இந்த வெற்றி சூத்திரத்தின் சமீபத்திய உதாரணம். ஆனால், இதே உத்தியை கர்நாடகாவில் கையாண்டபோது, பாஜகவிற்கு தோல்வியே மிஞ்சியது. மாநிலத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பி.எஸ். எடியூரப்பாவுக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், பாஜக வீழ்ந்து தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.