Shinzo Abe Japan PM : 'பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பானிய முன்னாள் பிரதமர்' ஷின்சோ அபேயின் வாழ்வும் வரலாறும்..!
2012-ம் ஆண்டு மீண்டும் ஜப்பானிய பிரதமாக தேர்வு செய்யப்பட்ட ஏபெ 2020-ம் ஆண்டில் தானாக பதவி விலகும் வரை அவரே அசைக்க முடியா சக்தியாக திகழ்ந்தார்.
ஷின்ஸோ ஏபெ ஜப்பானிய அரசியலிலும் ஜப்பானிய வரலாற்றிலும் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்தவர். உலக அரங்கில் அரசியல் ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் அழுத்தமான நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரர். ஜப்பானின் பிரமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமைகளுடன் நரா(Nara) நகரின் ஒரு தெருவின் சந்திப்பில், தான் பிரதமராக இருந்த லிபரல் டெமாக்ரட்டிக் பார்டி ( Liberal democratic party )-யை சேர்ந்த கெய் சடோ ( Kei sato ) விற்காக நடைபெறவிருந்த மேலவைத் தேர்தலின் பொருட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவரை அவருக்கு பின்னால் இருந்து கழுத்தில் சுடப்பட்டு உயிரழந்துள்ளார். அவரைச் சுடுவதற்காக பெரிய துப்பாக்கியுடன் சுடும் தொலைவிற்கு பல்வேறு சோதனைகளையும் மீறி கொலையாளி எப்படி வந்தார் என ஜப்பான் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி முன்னாள் கடற்சார் தற்காப்பு படையின் உறுப்பினராக பணியாற்றி பின்னர் விலகியுள்ளார்.
ஏபெவின் அரசியல் வம்சாவளி
நீண்ட அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டது ஏபெவின் குடும்பம். அவரது தந்தை ஷிண்டரோ ஏபெ முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அவரது தாய் வழி தாத்தா நொபுசிகே கிஷி முன்னாள் பிரதமராகவும் இருந்தவர்கள். கிஷி இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அண்டை நாடுகளுக்கு இணையாக பொருளாதாரத்தை வலுவாக்கியவர்களில் மிகவும் முக்கியமானவராவார். ஹிடேகி டோஜோ அமைச்சரவையில் பொருளாதார அமைச்சராக பணியாற்றிய கிஷி இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரான போர் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். போருக்கு பின்பாக முக்கிய போர் குற்றவாளியாக மூன்றாண்டுகள் சிறையிலிருந்த கிஷி-யே ஜப்பானை வழி நடத்த சிறந்தவர் என அமெரிக்கா அவரை சிறையிலிருந்து விடுவித்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவையும் வழங்கியது. கிஷியின் பெரும் முயற்சியால் உருவாகிய லிபரல் டெமாக்ரட்டிக் பார்ட்டி இன்று வரை ஜப்பானின் அரசியலில் ஆளுமை செலுத்தி வருகிறது. பின்னர் பிரதமாரான கிஷி, அரசுக்கெதிராக 1960-ல் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் காரணமாக பதவியை இழந்தார். தன் தாத்தா கிஷியை எப்போதுமே தன் ஆதர்ஷமாக கொண்ட ஏபெ 1993-ல் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
ஏபெ எனும் அரசியல் ஆளுமை
1993-ல் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஏபெ பின்னர் 2005-ல் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்கு பின்னான ஜப்பானின் இளம் பிரதமாராக 2006-ல் ஏபெ தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் 2007-ல் பிரதமர் பதவியிலிருந்து விலகி அதற்காக தன் உடல்நிலையை காரணமாகச் சொன்னாலும், பல்வேறு நிதி நிர்வாக சீர்கேடுகளுக்கு அவர் வித்திட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற மேலவையில் அவரது கட்சி பலமிழந்ததும் காரணமாக பார்க்கபட்டது. பின்னர் யாரும் எதிர்பாரா விதத்தில் 2012-ம் ஆண்டு மீண்டும் ஜப்பானிய பிரதமாக தேர்வு செய்யப்பட்ட ஏபெ 2020-ம் ஆண்டில் தானாக பதவி விலகும் வரை அவரே அசைக்க முடியா சக்தியாக திகழ்ந்தார். அந்த பதவி விலகலுக்கும் தன் உடல் நலனில் ஏற்பட்டுள்ள குறைபாட்டையே காரணமாக சொன்னார் ஏபெ.
ஜப்பானில் ஏபெ நிகழ்த்திய மாற்றங்கள்
பழமைவாத வலதுசாரியாகவே ஏபெவை ஜப்பானிய அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு வந்தனர். இரண்டாம் உலகப் போருக்கு பின்பாக ஜப்பான் தன்னை அமைதி விரும்பும் நாடாகவே அறிவித்து அரசியலமைப்பினை உருவாக்கி செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த நிலையினை மாற்றியமைக்க வேண்டுமென ஏபெ தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஜப்பானை சூழ்ந்துள்ள அண்டை நாடுகளால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கையாண்டு ஜப்பானை பாதுகாப்பதற்கு ஒரே வழி அமைதியான நாடு எனும் அரசியலமைப்புச் சட்டத்தினை நீக்கி ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஏபெ அதனை 2015-ல் பல்வேறு எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு இடையே நிகழ்த்திக் காட்டினார். பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் அவர் காட்டிய நெருக்கத்தால் அமைதியை விரும்பும் மக்கள் ஏபெவை அமெரிக்காவின் சொல்படி நடப்பதாகவும், அமெரிக்காவின் சொல்படியே புதிய அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் விமர்சித்தனர். இப்படி, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவர் தொடர்ந்து அரசியலில் ஆளுமை செலுத்தியே வந்தார். அதோடு மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ததன் பொருட்டு அவரின் பொருளாதார சீர்திருத்தங்கள் உலக அரங்கில் ’ஏபெநாமிக்ஸ்’ என அழைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டாலும் கோவிட்-19 காலக்கட்டத்தில் அவரின் செயல்பாடுகள் மோசமாக இருந்ததாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அரசியல் ரீதியாகவும் அவர் உள்ளூர் அரசியலில் தனக்கு பின்னர் வந்தவர்களை தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள பெரும் முயற்சியில் இருந்து வந்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த வீரர்களை அவமதிக்கும் விதமாக ஏபெ அரசியலமைப்பை மாற்றியதாக எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், ஏபெயின் செயல்பாடுகளாலும் அவரது நடவடிக்கைகள் தனக்கு பிடிக்காததாலேயே சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள டெட்சுயா யெமகாமி தெரிவித்ததாக ஜப்பானிய போலீஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.