38 பேர் இருந்தும் எய்ம்ஸ் பற்றி கேள்வி எழுப்பாமல் இருக்கிறார்கள்... திமுக எம்பிக்களை சாடிய எடப்பாடி பழனிசாமி!
”காவிரி நதிநீர் பிரச்னையின்போது நாங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அவையை ஒத்தி வைக்கும் அளவுக்கு குரல் எழுப்பியுள்ளோம்”
சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவை பின்வருமாறு:
”வரும் 17ஆம் தேதி கழக தொடக்க விழா ஆண்டு என்பதால் அது குறித்து சேலம் புறநகர் பகுதிகளில் சிறப்பாக தொடக்க விழா நடைபெற வேண்டும் என இன்று நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்தோம். மீண்டும் சட்டமன்றம் முடிந்து தான் என்னால் வர முடியும் என்பதால் முன்னேற்பாடுகளாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 38 பேர் உள்ளனர். ஏன் நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.
காவிரி நதிநீர் பிரச்னையின்போது பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அவையை ஒத்தி வைக்கும் அளவுக்கு குரல் எழுப்பியுள்ளோம்.
ஆனால் இன்றைய ஆளும் கட்சியான திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் ஏய்ம்ஸ் மருத்துவமனை குறித்து குரல் கொடுத்து அதை துரிதமாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதுதான் எங்கள் கேள்வியும். அதிமுக இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எடப்பாடி நகராட்சியில் 12ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ரவி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணைந்து கொண்ட நிகழ்வு எடப்பாடி பழனிசாமி முன்னிகையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”ஆன்லைன் சூதாட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை வேகமாக துரிதமாக நிறைவேற்றினால் இனி விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றலாம் இதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் முக்கியப் பொறுப்பில் உள்ள மூத்த அமைச்சர் பொதுக் கூட்டத்தில் கருத்தை வெளியிடுவது வருந்ததக்கது. ஏழை, எளிய பெண்கள் தான் நகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல வருந்தத்தக்கது. இதேபோன்று பல திமுக அமைச்சர்கள் மக்களை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது.
திமுகவுக்கு நிர்வாகக்கோளாறு, நிர்வாக திறமையற்ற முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டு உள்ளார். இது நிரூபணமாகியுள்ளது. சென்னை மாநகரில் மழைகளில் பணி செய்தால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுமுறையாக கடைபிடிக்கப்படாததால் சென்னை மாநகரில் பல்வேறு வீதிகளில் பள்ளத்தை தோண்டி விட்டு பணிகளை தொடராமல் உள்ளது வேதனைக்குரியது. இதை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கவேண்டும்.
அதிமுகவை முடக்க நினைப்பவர்கள் காற்றோடு கரைந்து போவார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் 100 சதவீதம் ஒன்றிணைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்கள் மற்றவர்கள் தூண்டுதல்பேரில் கருத்துக்களை கூறுகிறார்கள். அதிமுக அபரிவிதமாக விதமாக வளர்ச்சி கண்டுகொண்டிருக்கும் நிலையில் வேண்டுமென்றே சிலபேர் அதிமுகவிற்கு குந்தகம் விளக்கும் வகையில், அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு அதிமுகவில் இனி இடமில்லை, அதிமுகவை இனி தொண்டர்கள் தான் முன்னிருந்து கட்சியை நடத்துவார்கள்” என்றார்.