MKS In Oxford "சுயமரியாதை இயக்க நூற்றாண்டு’ ஆக்ஸ்போர்டில் உரையாற்றவிருக்கும் முதல்வர்..!
”சுயமரியாதை இயக்கம் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தையே திராவிடர்களின் சமூக விடுதலைக்கான முதல்படியாக கருதியது”

தந்தைப் பெரியார் 1925ஆம் ஆண்டு ‘சுயமரியாதை’ இயக்கத்தைத் தொடங்கினார். தமிழ்ச்சமூகத்தில் அதுவரை நிலவிவந்த சமூக கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்டார். மக்களிடத்தில் சமத்துவத்தையும் சமூகத்தில் சமூக நீதியையும் நிலைநிறுத்துவதை அடிப்படையாக கொண்டார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகளை வரையறுத்து தந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம்தான்.
சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை கொள்கை
சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை சாதி ஒழிப்பு. அதற்கு ஆதாரம் ஆதிதிராவிடரின் சுயமரியாதையும் முன்னேற்றமும். அதனால்தான், இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் உழைப்பை தந்த பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று இழிவுப்படுத்தி அவர்களுக்கு கல்வியையும், சொத்துரிமையும் தடை செய்து வைத்திருந்த சமூக கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார் தந்தைப் பெரியார். சுயமரியாதை இயக்கம் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்தையே திராவிடர்களின் சமூக விடுதலைக்கான முதல்படியாக கருதியது.
முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம்
“தீண்டப்படாதார் விடயத்தில், தீண்டப்படாதார்களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது, தர்க் கஸ்து [= விண்ணம் செய்து கோரும் புறம்போக்கு] நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது” என செங்கல்பட்டில் 1929 பிப்ரவரி 17, 18ஆம் தேதிகளில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநில மாநாட்டில் தீர்மானமும் இயற்றினார் தந்தை பெரியார்.
ஆதிதிராவிட மக்களின் மீதான சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடுவதையே தனது வாழ்க்கை இலக்காக கொண்டு செயல்பட்ட தந்தைப் பெரியார், ஆதி திராவிட மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், அவர்களது சமூக முன்னேற்றத்திற்கும் தனது வாழ்நாள் முழுமைக்கும் போராடினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின்
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் வருகிற 4 ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். இந்த தருணத்தில் சுயமரியாதை இயக்கத்தின் இலட்சியத்தை அடைவதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வியில் முக்கியத்துவம்
நீதியும் சமத்துவமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கு மிகமுக்கியமானது. இந்த விழுமியங்களை முன்னிறுத்தி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் பன்முக நடவடிக்கைகள் இப்போது பல்வேறு வெற்றிகளையும், சாதனைகளையும் காட்டத் தொடங்கியுள்ளன.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் முதல் உயர்கல்வி மேற்படிப்பிற்கான முழுநிதியளிப்பு வரை, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் கல்வியை அனைவருக்கும் எட்டும்படி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளின் 94% தேர்ச்சி விகிதம், இத்திட்டங்களின் வெற்றிக்கு ஒரு சான்றாகும். இது கடந்த ஆண்டை விட 10% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த எண்ணிக்கை வெறும் புள்ளிவிவரம் அல்ல; இது நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் அறிகுறி
உயரிய கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் ஆதிதிராவிட மாணவர்கள்
இன்னும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மாணவர்களில் 135 பேர் IIT, NIT, NIFT, தேசிய சட்டப் பள்ளிகள் & பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த சாதனைக்கு அரசின் சிறப்பு பயிற்சித் திட்டங்களே காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள். JEE, CLAT, CUET போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலக்காகச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படுகின்றன. இது கல்வி வாய்ப்புகளைச் சமப்படுத்துவதற்கும், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்குமான உதாரணமாக திகழ்ந்து வருகிறது.
தத்துவத்தின் அடிநாதம் பெரியார்
இந்த முன்னேற்றத்தின் பின்னால் உள்ள தத்துவம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அடித்தளக் கொள்கைகளுடன் ஆழமாகப் பொருந்துகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, சுயமரியாதை இயக்கம் கல்வியைச் சமத்துவத்திற்கான ஒரு கருவியாகக் கருதியது. இன்று, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கான நடைமுறை முயற்சிகளாகக் காணப்படுகின்றன.
‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்’ போன்ற திட்டங்கள், இலக்கை இன்னும் தூரத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆதிதிராவிட, பழங்குடி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு முழுநிதியளிப்பு வழங்கி வருகிறது.
மனபான்மை மாற்றமே முதலில் ஏற்பட வேண்டும்
விடுதிகளின் பெயர்களை ‘சமூகநீதி நலவிடுதிகள்’ எனப் பெயர்மாற்றம் செய்வது போன்ற செயல்கள், சமூகத்தில் ஏற்படுத்தப்படும் மனப்பான்மை மாற்றத்தை எடுத்துரைக்கின்றன. இது சாதி சார்ந்த இழிவுகளை அகற்றுவதற்கான ஒரு முன்முயற்சியாக பார்க்கப்படுகிறது.
‘தாட்கோ’வங்கி மூலம் நிதி சேவைகளை வழங்குவது, ‘ஐந்திணை’ திட்டம் மூலம் வேளாண்மை செய்வதற்கு உதவிகள் வழங்குவது போன்ற முயற்சிகள், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவை அனைத்தும் பொருளாதார அதிகாரமளித்தலை மையமாக கொண்டு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகின்றன. ஆதிகலைக்கோல் விழா, ஆதிதிராவிட – பழங்குடி சமூகங்களின் பண்பாட்டு மரபைக் கொண்டாடுகிறது
சுயமரியாதை இயக்க கொள்கைகளுக்கு முக்கியத்துவம்
தந்தைப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எந்த நோக்கத்திற்காக தொடங்கினாரோ அந்த இலட்சியத்தில் திராவிட மாடல் ஆட்சி சாதித்துக் காட்டி வருகிறது என்பது திராவிட இயக்கதினரின் முழக்கமாக இருக்கிறது. ஆதிதிராவிட மக்களில் கல்வி, பொருளாதாரம், அரசியல் உரிமை, பண்பாட்டு மரபைப் பேணுதல் என அனைத்திலும் இந்த நான்காண்டுகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மிகுந்த அக்கறையோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.























